Published : 08 Mar 2025 01:11 AM
Last Updated : 08 Mar 2025 01:11 AM

பெண்களுக்கு உரிமையை வென்றெடுக்க உறுதியேற்போம்: தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து

படம்: க்ராக் ஏஐ

உலக மகளிர் தினத்தையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் அனைத்து பெண்களும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக விளங்குகின்றனர். அவர்களுக்கு இதயங்கனிந்த மகளிர் தின வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மகளிர் தினத்தில் மட்டும் பயன்படுத்தும் முழக்கமாக வைக்காமல், உண்மையாகவே பெண்களுக்கு முழுமையான விடுதலையும், உரிமையும் வென்றெடுத்துக் கொடுக்க உறுதியேற்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு காணவும், பெண்களுக்கான விடுதலையை வென்றெடுக்கவும் மதிமுக துணை நிற்கும்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: பெண்களுக்கான உரிமைக்காகவும் பாலின சமத்துவத்துவத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் உறுதியாக முன்னெடுப்பதோடு ஜனநாயக அமைப்புகளும், பெண்ணுரிமை இயக்கங்களும் நடத்தும் போரட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பெண்களின் உழைப்புக்கும், உயர்வுக்கும் துணையிருப்போம் என்பதே அவர்களுக்கு மகளிர் தினத்தில் அளிக்கும் உத்தரவாதமாக இருக்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த உறுதியேற்போம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பெண்களுக்கு ஏற்படும் தடைகளை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை தன்வசப்படுத்தி வெற்றியுடன் கூடிய புது சரித்திரம் படைக்க உறுதியேற்போம்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்த தமிழகத்தில், பெண்களின் உரிமைகள் அனைத்தும் பெற்றுத் தர அனைவரும் முன்வர வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமதலா விஜயகாந்த்: பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் என்றைக்கும் தேமுதிக இருக்கும். பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை பெண்களை இழிவாக நடத்துவது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து பெண் இனத்தைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

வி.கே.சசிகலா: துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும், அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து, புதிய சரித்திரம் படைக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x