

கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ராணுப்பேட்டையில் பாஜக தலைவர் என்று மற்றொருவரின் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது திமுகவினர்தான். பல்வேறு விஷயங்களில் எங்களை எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு செய்கின்றனர்.
ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்க மாட்டோம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறுகிறார். 2026-ல் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவோம். பாஜகவின் செல்வாக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தெரியும். மும்மொழிக் கொள்கை தொடர்பான கையெழுத்து இயக்கத்துக்கு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். கையெழுத்து இயக்கம் சர்க்கஸ்போல இருப்பதாக கூறும் முதல்வர், துணை முதல்வர் உதயநிதி நீட்டுக்காக நடத்திய கையெழுத்து இயக்கம் பற்றி கூறட்டும். மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தின் உரிமையை மேகேதாட்டுவிலும் விட்டுக் கொடுக்கத் தயாராகி விட்டார் முதல்வர் ஸ்டாலின். சாராய ஆலைகள் மற்றும் டாஸ்மாக் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், அது எவ்வாறு தவறாகும்?
நாங்கள் எந்த கட்சியையும், தலைவரையும் சிறுமைப்படுத்தி பேசவில்லை. தேர்தலின்போது முக்கியக் கட்சி எதுவாக இருக்கும், யார் முதல்வர் என்பதையெல்லாம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். தற்போதைய சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வருக்கு பதற்றம்... பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளப் பதிவில், "மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்துக்கு 36 மணி நேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு அளித்துள்ளனர். இந்த இயக்கத்துக்கு தமிழகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளதால், இதைக்கண்டு முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார். கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான கூச்சல்கள் எந்தப் பயனும் அளிக்காது. போலி இந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. எனவே, முதல்வர் ஸ்டாலின், இந்தி திணிப்பு என்ற காகித வாள் வீசுவதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.