

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசு துறை அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியது: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், எம்.பி., எம்எல்ஏக்கள் விடுத்த கோரிக்கைகளின்படி சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், வாய்க்கால் கல்வெட்டு கட்டுதல், பாலம் கட்டுதல், சமுதாய நலக்கூடம் அமைத்தல், அரசு மருத்துவமனையை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு சாலைகள் சீரமைக்க மற்றும் புதிதாக அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தவிர, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று, திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் இளைஞர் விளையாட்டுத் துறை சார்பாக 3.5 ஏக்கர் பரப்பளவில் முதல்வர் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், ரூ.18 கோடி மதிப்பில் 12 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய 3 சேமிப்பு கிடங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் வீரன்நகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, உடனடியாக பட்டா தயார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பட்டா மட்டும் கொடுத்தால் போதாது. சம்பந்தப்பட்ட 77 குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் வீடு கட்டித் தருமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நரிக்குறவர்களுக்கு கொருக்கை பகுதியில் வீடுகட்டிக் கொள்வதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட உள்ளது.
நான் கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டத்தை ஆய்வு செய்து வந்துள்ளேன். நன்றாக வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளார்கள் என்றார்.
தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி சென்ற துணை முதல்வர் உதயநிதி, வீரன் நகர் பகுதிக்கு சென்று 77 பயனாளிகளுக்கு கொருக்கை பகுதியில் உள்ள இடத்துக்கு வீட்டு மனை பட்டா, அங்கு வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதிக்கான உத்தரவு ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர், மன்னார்குடி சென்ற துணை முதல்வர், தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, மன்னார்குடி பேருந்து நிலைய கட்டுமானப் பணியை ஆய்வு செய்தார்.
பள்ளிக் குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக் கூடாது: அதன்பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஜாக்டோ ஜியோ ஊழியர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 4 அமைச்சர்கள் கொண்டகுழு அமைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். மத்திய அரசின் மும்மொழி கொள்கை, நிதிப்பகிர்வு போன்றவற்றை மையப்படுத்தி தொடர்ந்து தமிழக அரசு எதிர்த்து குரல் கொடுப்பதன் காரணமாக, மத்திய அரசு தனது ஏஜென்டுகளாக செயல்படும் அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்துகிறது. இது பிரச்சினைகளை திசை திருப்புவதற்கான முயற்சி.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் குழந்தைகளிடம் பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்கக் கூடாது, நாங்களும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து வாங்கினோம். ஆனால், பள்ளி மாணவர்களை தவிர்த்து விட்டுத்தான் கையெழுத்து வாங்கினோம்" என்றார்.