“ரூ.10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம்!” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

“ரூ.10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம்!” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
Updated on
2 min read

காஞ்சிபுரம்: மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சி என்றும், மும்மொழிக் கொள்கை திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழ்நாடு ஏற்காது என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் சென்னை இலக்கியத் திருவிழா- 2025 இன்று நடைபெற்றது. இந்த விழாவை அமைச்சர்கள் ஆர்.காந்தி, அன்பில் மகேஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: “இலக்கியச் செழுமை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு ஐந்து இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது நூலக இயக்ககம் வாயிலாக தமிழகத்தில் பொருநை, வைகை, காவேரி, சிறுவாணி, சென்னை என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கியத் திருவிழாக்களும், சென்னை இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை இலக்கியத் திருவிழா காஞ்சிபுரத்தில் நடத்தப்படுகிறது. வாசிப்பு என்பது மிகவும் முக்கியமானது. தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது கூட வாசித்துக் கொண்டிருந்த நூலைப் படித்துவிட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யுங்கள் என்று மருத்துவரைக் கேட்டுக் கொண்டவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. அவர் பிறந்த காஞ்சி மண்ணில் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இலக்கியத் திருவிழா நடத்துவது மிகவும் பொருத்தமானது” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறிக் கொண்டே மத்திய அரசில் இருப்பவர்கள் சமஸ்கிருதத்துக்கு மட்டும் ரூ.1,488 கோடி ஒதுக்கியுள்ளனர். மேடைதோறும் திருக்குறளை கூறுகின்றனர். மக்கள் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போதே நிதி சமஸ்கிருதத்துக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது. தமிழுக்கு சொற்ப நிதி ஒதுக்கப்படுகிறது.

தற்போது நடைமுறைப்படுப்படுத்த முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கை இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் மறைமுக முயற்சிதான். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே போதுமானது. இந்த இரு மொழிக் கொள்கையை கொண்டுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதிக்கின்றனர். லண்டன் பேராசிரியர் ஒருவர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்த மாணவர்களாக உள்ளனர் என்று கூறுகிறார்.

மொழியை திணித்து தமிழ்நாட்டை அடுத்த நிலை வளர்ச்சிக்கு செல்லாமல் தடுக்க முயல்கின்றனர். என்றைக்கும் தமிழ்நாட்டு முதல்வர் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டார். நீங்கள் கொடுக்கும் நிதிக்காக மும்மொழிக் கொள்கையை ஏற்று தமிழ்நாட்டை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழக்கும் பாவ காரியத்தை நாங்கள் செய்யமாட்டோம். ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம்” என்றார்.

இந்த விழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பான பங்காற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவைத் தொடர்ந்து ரூ.3.57 கோடி மதிப்பில் அமைய உள்ள மாவட்ட நூலக அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு பள்ளிகளின் வகுப்பறைகளும் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி.க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், பொது நூலக இயக்கக, இயக்குநர் பொ.சங்கர், ஆட்சியர் கலைச்செல்வி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in