

மதுரை: ''பாசன நீரை கூடுதலாக தேக்கி வைக்க வைகை அணையை தூர்வாரி புனரமைத்து தர வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்,'' என்று தென் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1959-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71 அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. இந்த அணை கட்டி திறக்கப்பட்ட பின் தற்போது வரை தூர்வாரப்படவில்லை.
இதன் கொள்ளளவு 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடியாகும். ஆனால், அணையில் ஆங்காங்கே மணல் மற்றும் மண் திட்டு காணப் படுவதால் அணை கட்டியபோது இருந்த முழுமையான கொள்ளளவுக்குத் தண்ணீர் தேக்க முடியவில்லை. அதனால், தற்போது இந்த அணையின் மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை. வைகை அணை தூர்வாரப் பட்டால் 868 மில்லியன் கனஅடி கூடுதல் தண்ணீரைத் தேக்க முடியும். தொடக்க காலத்தில் ரூ.244 கோடியில் வைகை அணையை தூர்வாரும் திட்டம் தயாரிக்கப்பட்டது.
அதற்கான ஆய்வுகள் நடந்து வந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையால் அந்தத் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அதற்கு மாற்றுத் திட்டமாகச் செலவே இல்லாமல் தூர்வாரும் திட்டம் குறித்தும், அதில் அரசுக்கு ரூ.201 கோடி வருவாய் கிடைக்கும் வழிமுறைகள் பற்றியும் மதுரை பெரியாறு வைகை வடிநிலப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதற்கும் ஆய்வு நடந்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில். தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் வைகை அணையை தூர்வார வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை தென் மாவட்ட விவசாயிகள் வைத்துள்ளனர்.
இதுகுறித்து வைகை - திருமங்கலம் பிரதான பாசன கால்வாய் நீரினை பயன்படுத்வோர் விவசாயிகள் சங்கம் தலைவர் எம்பி.ராமன் கூறும்போது, ''தென் மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிற வைகை அணையை தூார்வாரி புனரமைத்து பாசன நீரை கூடுதலாக தேக்கி வைத்து விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வர இருக்கிற 2025-2026 வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும். வைகை அணையின் மூலம் செயல்படுத்தப்பட்ட உசிலம்பட்டி 58ம் கால்வாய் பாசனத்திட்டத்திற்கு நிரந்தர அரசு ஆணை வழங்கியும் தண்ணீர் தருவதில்லை. இந்த பாசன கால்வாய்கள் அனைத்தும் கான்கிரீட் சிமென்ட் வாய்க்காலாக புனரமைத்து தர வேண்டும்.
வைகை திருமங்கலம் பிரதான விரிவாக்க பாசன கால்வாய் 50 ஆண்டுகளுகு்கு முன் வெட்டப்பட்டு கால்வாய் சிமென்ட் சிலாப்புகள் சிதிலமடைந்து பாசன நீர் கடைமடை வரை செல்ல முடியாத நிலையை 26 கி.மீ., மெயின் வாய்க்கால்களை சிமெண்ட் வாய்க்காலாக 1 ஆண்டுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. ஆனால், மெயின் வாக்கால் மூலம் பிரிந்து கண்மாய்க்கு செல்கின்றன துணை பாசன நீர் வாய்க்கால் அனைத்தும் சிதிலமடைந்து பாசன நீர் செல்ல முடியாமல் புதர் மண்டிக் கிடக்கிறது.
இந்த நிதி ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் கால்வாயினை கான்கிரீட் சிமென்ட் கால்வாயாக பொதுப் பணித்துறை மூலம் இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குண்டாறு வடிகால் மூலம் செயல்படுத்தப்பட்ட உசிலம்பட்டி குன்னத்தூர் அசுவாமா நீர் தேக்க அணையை பலப்படுத்தி மேட்டுப்பாங்கான மண் மேடுகளை அகற்றி கூடுதலாக தண்ணீரை தேக்கி உசிலம்பட்டி தாலுகா வடக்கு - தெற்கு பகுதி வறண்ட பகுதியாக உள்ள 50 கிராமங்களுக்கு பாசனம் பெறும் வகையில் அணையை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் வேளாண் பொறியியல் துறை மூலம் பாசனம் பெறுகிற விவசாயிகள் நிலங்களுக்கு நீர் கடைமடை வரை செல்ல பீல்டு சேனல் கல் கட்டிடத்துடன் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வாய்க்கால் அனைத்தும் சுவடுகள் இல்லாமல் போய்விட்டது. இந்த துறையின் பீல்டு சேனல் பாசன வாயக்கால் அமைத்து தர இந்த பெட்டில் நிதி ஒதுக்கி தர வேண்டும். இது மட்டுல்லாமல் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் நலனை பாதிக்கக்கூடிய சில திட்டங்களை திரும்ப பெற வேண்டும். வேளாண் நிலங்களை விவசாயிகளே கேட்காமலே நிலங்களை கையகப்படுத்தும் 2024 தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.