“மிஸ்டுகாலில் 1 கோடி பேரை கட்சியில் சேர்த்தவர்கள்...” - பாஜக கையெழுத்து இயக்கம் மீது உதயநிதி விமர்சனம் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அரசுத் திட்டப் பணிகள் குறித்த கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத் திட்டப் பணிகள் குறித்த கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
Updated on
2 min read

திருவாரூர்: “குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்க கூடாது. நாங்களும் நீட் தேர்வுக்காக சுமார் 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது, பள்ளி மாணவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு தான் நாங்கள் கையெழுத்து வாங்கினோம். ஏற்கெனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை பாஜகவில் சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், மும்மொழிக் கொள்கைக்காக மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவதைப் பார்க்கிறோம்,” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 7) திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி கூறியது: “டெல்டா மாவட்டங்களுக்கு, 2023-ம் ஆண்டில் ஒருமுறை வந்தேன். 2024-ல் ஒருமுறை வந்தேன். தற்போது 2025-ல் மூன்றாவது ஆய்வு. நல்ல முறையில் அரசுத் திட்டப் பணிகள் செய்துள்ளனர்.

எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும், சில விஷயங்களை கேட்டுள்ளனர். குடிதண்ணீர், தெருவிளக்குகள் அமைத்தல், சாலை வசதிகள், மினி பஸ் வசதி போன்றவற்றை கேட்டுள்ளனர். அவையெல்லாம் ஒவ்வொன்றாக விரைவில் செயல்படுத்தப்படும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு கூட நான்கு அமைச்சர்கள் குழு அமைத்து முதல்வர், வரவழைத்து பேசியிருக்கிறார். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

மத்திய அரசு, நம்முடைய மும்மொழி கொள்கை எதிர்ப்பு, நிதிப் பகிர்வு, தொகுதி மறு சீரமைப்பு ஆகியவற்றுக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மத்திய அரசு தங்களுடைய ஏஜென்டை வைத்து திசைத் திருப்பும் வழியாகத்தான், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் மேற்கொள்ளும் ரெய்டுகளைப் பார்க்க வேண்டும். ரெய்டு முடியட்டும். அதற்குப் பிறகு அவர்களே சொல்வார்கள். அதன்பிறகு அதுபற்றி பேசலாம்.

குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது. நாங்களும் நீட் தேர்வுக்காக சுமார் 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது, பள்ளி மாணவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டுதான் நாங்கள் கையெழுத்து வாங்கினோம். ஏற்கெனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை பாஜகவில் சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், அக்கட்சியினர் மும்மொழிக் கொள்கைக்காக மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவதைப் பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொது சுகாதாரத்துறை, நீர்வள ஆதாரத்துறை, வேளாண்மைத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பள்ளிக் கல்வித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், அவற்றினால் பொதுமக்கள், விவசாயிகள் அடைந்த பயன்கள் குறித்து அலுவலர்களுடன் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in