Published : 07 Mar 2025 09:19 AM
Last Updated : 07 Mar 2025 09:19 AM
‘குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித்தருவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் திட்டத்தில், குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் எளிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதற்காக 2024-25-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஏழைகள், வீடற்றவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அரசு விதிகளை வகுத்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி உதவி பொறியாளர்கள், வட்டார பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும்.
இதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் 3,300 வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பயனாளிகளை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்வுசெய்து பணி ஆணைகளை வழங்கி வந்தனர். இதில், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 458 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பயனாளிகளை அரசு அறிவித்துள்ள விதிகளின் படி தேர்வு செய்ய வேண்டும் என உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ-வான மணிக்கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலரை (பிடிஓ) அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், திமுக ஒன்றியச் செயலாளர்களான வசந்தவேலும், முருகனும் தாங்கள் சொல்லும் நபர்களுக்கே வீடுகளை ஒதுக்க வேண்டும் என பிடிவாதம் காட்டியதாகச் சொல்கிறார்கள்.
இதனால் யார் சொல்வதைக் கேட்பது எனத் தெரியாமல் குழம்பிப் போன பிடிஓ-வான உமாராணி, எம்எல்ஏ சொன்னபடியே கடந்த 4-ம் தேதி ஊராட்சித் தலைவர்களை அழைத்து பயனாளிகளை தேர்வு செய்ய வலியுறுத்தியிருக்கிறார்.
இதையறிந்த முருகன் மற்றும் வசந்தவேல் ஆதரவாளர்கள், திமுக கொடிகளோடு வந்து பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதனால், தன்னை வேறெங்காவது மாற்றிவிடும்படி திட்ட அலுவலரிடம் மன்றாடிக் கெஞ்சுமளவுக்குப் போயிருக்கிறார் பிடிஓ.
இதுகுறித்து திருநாவலூர் ஒன்றிய செயலாளர் வசந்தவேலிடம் நாம் பேசியபோது, “அதிமுக ஆட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தில் அதிமுக-வினருக்கு மட்டுமே வீடுகளை ஒதுக்கினார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அப்படி இருக்கையில், ஊராட்சி மன்றத் தலைவர் சொல்றவருக்குத் தான் வீடுகளை ஒதுக்குவோம்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலை செய்றாங்க. அதனால தான், அரசு வகுத்த தகுதி அடிப்படையில் திமுக-காரனை பரிசீலனை பண்ணுங்கன்னு சொல்லி கட்சிக்காரங்க பிடிஓ கிட்ட மனு கொடுத்துட்டு வந்தாங்க” என்றார்.
எம்எல்ஏ-வான மணிக்கண்ணனோ, “முதல்வரின் கனவுத் திட்டம்ங்க இது. அரசு என்ன விதிகளை சொல்லி இருக்கோ அதன்படி தான் பயனாளிகள் பட்டியலை பிடிஓ ரெடி பண்ணியிருக்காங்க. அவங்கள போய் இப்படி செய்யலாமா? அப்படியிருந்தும் கட்சிக்காரங்களையும் விட்டுடாதீங்கன்னு சொல்லியிருக்கேன். அதையும் மீறி சிலர் இப்படி நடந்துக்கிறது வருத்தமா இருக்கு. இது இப்படியே நீடிச்சா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
நானும் இந்த விஷயத்தை பொறுப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்றதா இருக்கேன்” என்றார். ஒன்றிய திமுக-வினரிடம் பேசியபோது, “இதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை. ஒன்றியச் செயலாளர்கள் இருவரும் பேசவேண்டிய விதத்தில் ‘பக்குவமாக’ பேசி தாங்களே ஒரு லிஸ்ட்டை ரெடி பண்ணி வைத்திருந்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட எம்எல்ஏ, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் ‘தன் பங்கிற்கு’ பேசி ஒரு பட்டியலை தயார் செய்ய வைத்தார்.
இருந்த போதும் தேர்தல் நேரத்தில் தனக்கு சிக்கல் வரலாம் என்பதால், ‘பயனாளிகள் யாரும் பத்துப் பைசா கூட கொடுக்க வேண்டாம்’ என ஊர் ஊருக்கு தண்டோரா போடாத குறையாகச் சொல்லி வருகிறார் எம்எல்ஏ. இதனால் உட்கட்சிக்குள்ளேயே உரசல் ஏற்பட்டு முற்றுகை வரைக்கும் வந்துவிட்டது” என்றார்கள். மொத்தத்தில், முதல்வரின் கனவு இல்லம் திட்டத்தை முன் வைத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக-வினரே களேபரத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT