

சென்னை: பிரபல கர்னாடக இசை மேதை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதை, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல இசை மேதையும் மிருதங்க கலைஞருமான ‘பத்மபூஷண்’ டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கர்னாடக இசைத் துறையில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கினார். வாழ்த்துரை வழங்கி அவர் பேசியதாவது: இந்தியாவின் கலாச்சார தலைநகராக சென்னை திகழ்கிறது.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, நான் சென்னையிலேயே தங்கிவிட்டதற்கு முக்கிய காரணம் கர்னாடக இசை. டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன் மிருதங்க கலைஞர் என்பதையும் தாண்டி, கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை இரண்டிலும் வல்லவர், சிறந்த பாடகர், பல கலைஞர்களை உருவாக்கிய குரு என பல பரிமாணங்கள் கொண்டவர். ‘டிவிஜி’ என்றால் ‘தி வெர்சடைல் ஜீனியஸ்’ (The Versatile Genius) பன்முகத் திறன் கொண்ட மேதை என்பதைத்தான் குறிப்பிடுகிறது.
ஒருமுறை, செம்பை வைத்தியநாத பாகவதர் தனது கச்சேரியில் ‘தாயே யசோதா’ பாடலை பாடினார். அதில் வரும் ‘மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி’ எனும் வரிகளை பாடும்போது, வயலின் கலைஞரையும், மிருதங்க கலைஞரையும் ஜாடையில் காண்பித்து உற்சாகப் படுத்தினார். அன்றைய கச்சேரியில் வயலின் வாசித்தவர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், மிருதங்கம் வாசித்தவர் டி.வி.கோபாலகிருஷ்ணன். இவ்வாறு அவர் பேசினார்.
டி.வி.கோபாலகிருஷ்ணன் தனது ஏற்புரையில், ‘‘எல்லா விருதுகள், பட்டங்களையும் இறைவனின் ஆசிர்வாதமாகத்தான் பார்க்கிறேன். இந்த பெருமைமிகு விருதையும் அப்படியே பார்க்கிறேன். இசையும், லயமும் நம் வசமானால், வாழ்க்கையே நமக்கு வசமாகும்’’ என்றார். விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் வி.சங்கர், செயலாளர் நந்தகோபால், நிகழ்ச்சி பொறுப்பாளர் உவைஸ் கரண் பிஜே ஆகியோர் கலந்துகொண்டனர்.