Published : 07 Mar 2025 05:15 AM
Last Updated : 07 Mar 2025 05:15 AM
சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், கோவையில் தனியார் மதுபான ஆலை, கரூரில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு என 10 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். இதற்கிடையே, கடந்த 2024 செப்டம்பர் மாதம் ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானார். அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். கரூர் காந்தி நகரில் செந்தில் பாலாஜியின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கரின் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தினர். கரூர் மாவட்டம் மாயனூரில் எம்.சி.சங்கரின் பெற்றோர் வீட்டுக்கும் அமலாக்கத் துறையினர் காலை 9 மணிக்கு சென்றனர். வீடு பூட்டியிருந்ததால் 6 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர். கரூர் ராயனூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளரான கொங்கு மெஸ் மணி என்ற சுப்பிரமணி, கரூர் கோதை நகரில் உள்ள சக்தி மெஸ் கார்த்தி ஆகியோரது வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை ஆழ்வார்பேட்டை வெங்கட்ரத்தினம் தெருவில் முன்னாள் மின்வாரிய அதிகாரி காசி என்பவரது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். மின்வாரிய அலுவலகத்துக்கு கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இவரது வீட்டில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிப கழகம்) தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 20 பேர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கிலும் சோதனை நடத்தப்பட்டது.
தியாகராய நகர் திலக் தெருவில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் மதுபான நிறுவனம், அக்கார்டு ஓட்டல், அவர் நடத்திவரும் ஆழ்வார்கள் மையம் ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தியாகராய நகரில் வாசுதேவன் சிவபிரகாசம் என்பவரை இயக்குநராக கொண்டு செயல்படும் கால்ஸ் மதுபான நிறுவன அலுவலகம், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அரசு மதுபான ஒப்பந்ததாரர் எஸ்.என்.ஜெயமுருகனுக்கு சொந்தமான எஸ்என்ஜெ குரூப்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனம் மதுபானம், சர்க்கரை உற்பத்தி ஆலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் மதுபான உற்பத்தி ஆலை கடந்த 1983-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து மதுபானங்கள் அதிக அளவு கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த ஆலையிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர், சென்னை, கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். சோதனை நடைபெற்ற இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் நள்ளிரவை கடந்தும் சோதனை நீடித்தது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று, சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்து, அவருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், சோதனை முழுமையாக முடிவடைந்து, அமலாக்கத் துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட பிறகே, எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது தொடர்பான முழு விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT