Last Updated : 06 Mar, 2025 08:32 PM

 

Published : 06 Mar 2025 08:32 PM
Last Updated : 06 Mar 2025 08:32 PM

3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்படுவர்: சிஐஎஸ்எஃப் டைரக்டர் ஜென்ரல் தகவல்

கோப்புப்படம்

சென்னை: சிஐஎஸ்எஃப் பிரிவில் அடுத்த 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக, அதன் டைரக்டர் ஜென்ரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி தெரிவித்தார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள மண்டல பயிற்சி மையத்தில் நாளை (மார்ச் 7) நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். விழாவில் ஜம்மு-காஷ்மீரில் 32 அறைகள் அடங்கிய முகாம் அலுவலகம், கொல்கத்தாவில் ஆயுதங்கள் வைப்பிடம், நொய்டாவில் 240 வீரர்களுக்கான குடியிருப்பு, சிவகங்கையில் உள்ள அதிகாரிகள் தங்கும் விடுதி மற்றும் 128 வீரர்களுக்கான குடியிருப்பு, ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் ஆகிய பணிகளுக்கு காணொலி மூலம் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதவிர குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து சிஐஎஸ்எஃப் வீரர்களின் கன்னியாகுமரி வரையான 6,553 கி.மீ தொலைவிலான சைக்கிள் பேரணியையும் அவர் தொடங்கி வைக்கிறார். இது குறித்து சிஐஎஸ்எஃப் டைரக்டர்ஜென்ரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது: “விமான நிலையங்களில் 10 லட்சம் பயணிகள், டெல்லி மெட்ரோ ரயிலில் 75 லட்சம் பயணிகள், துறைமுகம் உட்பட மற்ற இடங்களில் 15 லட்சம் பேர் என சராசரியாக தினமும் ஒரு கோடி பேரை நாங்கள் கண்காணித்து பாதுகாப்பு அளித்து வருகிறோம்.

எங்கள் படையில் 2 லட்சம் வீரர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 8 சதவீதம் பெண் வீரர்கள். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சிஐஎஸ்எஃப் பிரிவில் 50 ஆயிரம் வீரர்கள் புதிதாக பணியில் அமர்த்தப்படுவார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய வீரர்கள் அவர்கள் விரும்பும் இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். 2036 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் 300 இளம் வீரர்கள் அடங்கிய விளையாட்டு பிரிவு உருவாக்கப்படும். அதேபோல் சிஐஎஸ்எஃப் மகளிர் மலையேற்ற குழுவினர் 2026-ம் ஆண்டு ‘எவரெஸ்ட்’ சிகரத்தை அடைவார்கள்.

நாடு முழுவதும் 10 இடங்களில் பொது தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எங்களை தொடர்புகொண்டு அவசர உதவிகள் பெறலாம். வதந்திகள் குறித்தும் தெளிவு பெறலாம். விமான நிலையங்களில் பயணிகளை கையாள்வது தொடர்பாக எங்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. சமூக வலைத்தளம் மற்றும் பிற செய்திகளையும் கவனிக்கிறோம். தவறு செய்யும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். பயணிகளின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் செயல்படுகிறோம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், ஆயுத பயன்பாடு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ஆகியவற்றில் திறன் சார்ந்த வீரர்களை உருவாக்கி வருகிறோம். பாதுகாப்பு பணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதை பயன்படுத்தி வருகிறோம். பாதுகாப்பு பணியின் போது தரவுகளை சேகரிப்பது, தரவுகளை உறுதி செய்வது போன்ற பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தென் மண்டல ஐஜி சரவணன் கூறியதாவது: “சிஐஎஸ்எஃப் பிரிவின் ஒவ்வொரு மண்டலத்திலும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த 60 சதவீதம் பேர் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். எனவே, விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் அந்தந்த மாநில மொழிகளில் பேச வேண்டும். கன்னியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாநில மொழி தெரியாத வீரர்களிடம் உள்ளூர் மொழிகளில் பேச சில முக்கியமான வார்த்தைகள் கற்று தரப்படுகிறது” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x