கொடைக்கானலில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க சட்டப்பேரவை குழு பரிந்துரை: செல்வப்பெருந்தகை தகவல்

திண்டுக்கல்லில் நடந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய குழு தலைவர் செல்வப்பெருந்தகை.
திண்டுக்கல்லில் நடந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய குழு தலைவர் செல்வப்பெருந்தகை.
Updated on
1 min read

திண்டுக்கல்: கொடைக்கானலில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு, அரசுக்கு பரிந்துரை செய்யும் என திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்ட சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது.

திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர்களான பல்வேறு தொகுதிகளின் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். கூட்டம் துவங்கியதும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தொடர்ந்து நலத்திட்டங்களை குழுவினர் பயனாளிகளுக்கு வழங்கினர். இதைத் தொடர்ந்து கூட்ட முடிவில் செல்வப்பெருந்தகை கூறும்போது, “கொடைக்கானலில் மாஸ்டர் பிளான் 1993-க்கு பிறகு இல்லை. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு தீர்வு காண வேண்டும். அதேசமயம் 1400 கட்டிடங்களுக்கு மேல் துறை செயலர்களை அணுகி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து வருவாய்த் துறை செயலர், வீட்டுவசதித் துறை செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர்களை அழைத்து இந்த குழு விவாதிக்க உள்ளது. விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் பழநி அருகேயுள்ள பச்சையாற்றின் குறுக்கே அணை கட்ட இந்த குழு பரிந்துரைக்கிறது.

கொடைக்கானலில் போக்குவரத்துக்கு மாற்றுப்பாதை திட்டம் தயாரிப்பது குறித்து கண்டறிய அடுத்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். குறிப்பாக, கொடைக்கானலில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைத்து, அதில் கார்களை நிறுத்த பரிந்துரை செய்துள்ளோம். இதற்கான பணிகளை சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு மேற்கொள்ளும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in