

மதுரை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மும்மொழிக் கொள்கை அடிப்படையில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழியை 3-வது மொழியாக அறிவிக்கக் கோரி பிற மாநில முதல்வர்களுக்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு தங்கள் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: ‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் மும்மொழிக் கொள்கை. இந்த கொள்கையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அது இந்தி மொழியாக தான் இருக்க வேண்டும் என்பது அல்ல. அப்படிருக்கும் போது மும்மொழிக் கொள்கை என்னவென்று தெரியாமல் தமிழகத்தில் பிரதமர் மோடி அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.
தேசிய கல்வி கொள்கையில் 500 பக்கங்களில் மும்மொழி குறித்து ஒன்றிரண்டு பக்கத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதை தவறாக கருதி தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு பெரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழி குறித்து பலமுறை தெளிவுபடுத்திய போதும் தமிழகம் தவறை சரி செய்து கொள்ளாமல் இருக்கிறது.மும்மொழிக் கொள்கை கட்டமைப்பை கருத்தில் கொண்டால், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் மொழி சிறந்த தேர்வாக இருக்கும்.
இதனால் தங்கள் மாநில பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. 2 ஆயிரம் ஆண்டு பழமையான இலக்கிய மரபைக் கொண்ட வாழும் செம்மொழி. பிரதமர் மோடி தமிழின் தூதுவராக பணியாற்றி வருகிறார். உலகளவில் பலமுறை தமிழை பாராட்டி பேசியுள்ளார். பிரதமர் மோடி தமிழை மேம்படுத்த எடுக்கும் முயற்சியில் தமிழ் மொழியை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதை அவசியமாகிறது.
தமிழ் மொழியை மூன்றாவது விருப்ப மொழியாக சேர்த்தால் மாணவர்கள் இந்தியாவின் வளமான, இலக்கிய மற்றும் கலச்சார பாரம்பரியத்துடன் ஒன்றிணைவர், மாணவர்களின் மொழியியல் மற்றும் அறிவாற்றல் திறன் மேம்படும். இந்தியாவின் தொழில் துறை மற்றும் வர்த்தக துறையில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழகத்தில் பொருளாதார மற்றும் வணிக வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, உங்கள் மாநிலப் பள்ளிகளில் தமிழை ஒரு விருப்ப மொழியாக மூன்றாம் மொழியாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கெள்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.