

லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரானா இளையராஜா ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டலில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் மார்ச்.8-ம் தேதி அரங்கேற்ற உள்ளார். இதையொட்டி, இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இளையராஜா வீட்டுக்கு சென்று அவரை நேரில் தனித்தனியாக சந்தித்து ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இளையராஜா வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து நேற்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை, அவருக்கு ‘திருப்புடைமருதூர் ஓவியங்கள்’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, தொழிலதிபர் நல்லி குப்புசாமி , பரதநாட்டியக் கலைஞரும், திரைப்பட நடிகையுமான சோபனா சந்திரகுமார் ஆகியோரையும் அமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.