

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகள், தற்போது வாடகை தாய்மார்கள் தங்கும் வீடுகளாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களால் குடியிருப்புவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
படிப்பதற்காகவும், வேலைக்காகவும் ஏராளமானோர் சென்னை வருகின்றனர். இவர்களுக்காகவே ஏராளமான விடுதிகளும் இயங்கி வருகின்றன. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, மேத்தா நகர், அண்ணா நெடும்பாதை, கில் நகர் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி பெற்று இந்த விடுதிகளை தனியார்கள் நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது குழந்தைப்பேறு கிடைப்பதில் தாமதம், குழந்தையின்மை போன்ற காரணங்களால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள், மருத்துவமனைகளும் சென்னையில் அதிகரித்துள்ளன. இங்கு வங்கதேசம் உட்பட வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து குடு்ம்பத்துடன் வரும் பெண்கள் பலரை வாடகை தாய்மார்களாக மேற்கண்ட மையங்கள், மருத்துவமனைகள் ஒப்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஒப்பந்தம் செய்யும் அவர்கள் ஓராண்டு வரை தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, பின்னர் குழந்தை பெற்றுக் கொடுத்த பின்பு சொந்த ஊர் செல்கின்றனர். அவ்வாறு வாடகைக்கு வீடு கிடைப்பதில் முன்பு சிக்கலான நிலை இருந்தது. இந்நிலை தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஏனென்றால் தனியார் விடுதிகள் தற்போது வாடகை தாய்மாா்களுக்கான வாடகை வீடுகளாக மாறி வருகின்றன.
இதுகுறித்து விடுதி நடத்துவோர் கூறியதாவது: நாங்கள் வாடகைக் கட்டிடத்தில் மாணவர்களுக்கு விடுதிகள் நடத்துகிறோம். முன்பைவிட இப்போது செலவு பலமடங்கு அதிகமாகிவிட்டது. கட்டிடத்துக்கான முன்பணம், கட்டிட வாடகை, மின்கட்டணம், விடுதி மேலாளர், விடுதிக் காப்பாளர், சமையலாளர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்டோரின் சம்பளம், பராமரிப்புச் செலவு ஆகியன மிகவும் அதிகமாகிவிட்டது. இதற்கு ஏற்ப விடுதிக் கட்டணத்தை நிர்ணயிக்க முடியவில்லை.
அதனால்தான், பலரும் விடுதி நடத்துவதையே விட்டுவிட்டனர். இப்போது நடத்திக் கொண்டிருப்பவர்களும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பலரும் தாங்கள் நடத்தி வரும் விடுதிகளை வாடகை தாய்மார்களுக்கான வாடகை வீடுகளாக மாற்றிவிட்டனர். இதன்மூலம் பெரிய லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமலாவது விடுதிகளை நடத்த முடிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாடகைத் தாய்மார்கள் பெரும்பாலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கருத்தரிப்பு மையங்கள், வாடகை தாய்மார்கள், விடுதி நடத்துவோர் என மூன்று தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் இதற்கான முகவர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்கள், விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, எத்தனை பேர் சமர்ப்பித்துள்ளார்கள், அவ்வாறு சமர்ப்பிக்காதவர்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது எல்லாம் மில்லியன் டாலர் கேள்விதான்.
வாடகை தாய்மார்களுடன் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் வேறு மொழி பேசுபவர்களாக இருப்பதால், அவர்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மற்றவர்களுக்கும் தகவல் பரிமாற்றக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குடிநீர் உபயோகம், குப்பை கொட்டுவது, அதிகம் பேர் தங்கியிருப்பது, அடையாளம் தெரியாதவர்கள் வந்து செல்வது என்பன போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே வாடகை தாய்மார்களுக்கு வீடுகள் கொடுப்போரும், அந்தந்தப் பகுதி காவல் துறையினரும் இத்தகைய நடைமுறைச் சிக்கல்களைக் களைவது அவசர அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.