Published : 06 Mar 2025 12:39 AM
Last Updated : 06 Mar 2025 12:39 AM

பழநி முருகன் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: வல்லுநர் குழு தலைவர் பொங்கியப்பன் தகவல்

பழநி தேவஸ்தான அலுவலகத்தில் நடந்த மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழு கூட்டத்தில் பேசிய குழுத் தலைவர் பொங்கியப்பன். உடன், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

முருகன் கோயில் மூலவர் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று, பழநி கோயில் மூலவர் சிலை பாதுகாப்புக் குழுத் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான பொங்கியப்பன் தெரிவித்தார்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. போகர் சித்தர் மூலவர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார். மூலவர் சிலையைப் பாதுகாப்பது, பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி, ஆதீனங்கள், ஸ்தபதிகள் அடங்கிய 15 பேர் கொண்ட மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது மூலவர் சிலையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம்.

அதன்படி, பழநி தேவஸ்தான அலுவலகத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், பழநி எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் இணை ஆணையர் நடராஜன், தற்போதைய இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஐஐடி பேராசரியர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின்னர், குழுத் தலைவர் பொங்கியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பழநி முருகன் கோயில் மூலவர் சிலை உறுதித்தன்மையுடன் இருக்கும். சிலை பாதுகாப்பாக இருக்கிறது. மூலவர் சிலை குறித்த ஐஐடி குழுவினரின் ஆய்வு முடிவை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x