

சென்னை - பாரிமுனையில் குறளகம் எதிரே உள்ள உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர், சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளதால் இதன் வழியாக செல்லும் மெட்ரோ பயணிகள் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர்.
இதற்கு தீர்வு காண மெட்ரோ ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்றம், அரசு அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள், பெரிய கடைகளுக்கு வந்து செல்வோருக்கு உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் பேருதவியாக இருக்கிறது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏ-4 நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளதால், கடும் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால், இந்த மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலை பயன்படுத்தும் மெட்ரோ ரயில் பயணிகள் தங்கள் மூக்கை கர்சீப்பால் மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவொற்றியூரை சேர்ந்த சமூக ஆர்வலர் இரா.பூபாலன் கூறியதாவது: குறளகம் எதிரே உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தின் ஏ 4 நுழைவு வாயில் பக்கவாட்டு சுவற்றை சீறுநீர் கழிக்கும் இடமாக சமூக விரோதிகள் சிலர் மாற்றி உள்ளனர்.
இந்த நுழைவு வாயில் வழியாக அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெரியோர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் முகம் சுளிக்கும் வகையில் அசுத்தமாக இருக்கிறது. கடும் தூர்நாற்றம் வீசுவதால், மூக்கை கர்சிப்பால் மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு சிலர் மது அருந்திவிட்டு இயற்கை உபாதையை கழிப்பதால் மிகவும் அசுத்தமாக உள்ளது. இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடத்தை தூய்மையாக்கி முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.