தருமபுரி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள அலசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் முனிகிருஷ்ணன்(50), தனது நண்பர்களுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சென்று விட்டு நேற்று (மார்ச் 4) இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவருடன், ஓசூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(47), பசவராஜ்(38), மஞ்சுநாத்(47), சந்திரப்பா (50) ஆகியோரும் பயணித்தனர். அவர்களது கார், பாலக்கோடு அடுத்த ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே சென்றபோது சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது.

இந்த விபத்தில், காரை ஓட்டிச் சென்ற முனிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பசவராஜ் உயிரிழந்தார்.

இந்நிலையில், சீனிவாசன், உயர் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in