Published : 16 Jul 2018 07:43 AM
Last Updated : 16 Jul 2018 07:43 AM

சென்னை மியூசிக் அகாடமி விருதுகள் அறிவிப்பு: அருணா சாய்ராமுக்கு சங்கீத கலாநிதி விருது; தஞ்சாவூர் ராமதாஸ், ஓமணக் குட்டிக்கு சங்கீத கலாசார்யா விருது

சென்னை மியூசிக் அகாடமியின் நடப்பாண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பிரபல கர்னாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு வழங்கப்படுகிறது. சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் இந்த வருட சங்கீத கலாநிதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்னாடக இசையைப் பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று பரப்பி எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர்.

இவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு இசைக் கலைஞர்களுடன் ஃப்யூசன் நிகழ்ச்சிகள் பல நடத்தியவர். இந்தாண்டு டிசம்பர் 15 முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 92-வது ஆண்டு மாநாட்டுக்கு, இவர் தலைமை வகிப்பார்.

சங்கீத கலாசார்யா விருதுகள், பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு டி.எஸ். மணியின் சீடரான தஞ்சாவூர் ஆர். ராமதாஸ்-க்கும், திருவனந்தபுரம் ஸ்வாதித் திருநாள் இசைக் கல்லூரியில் இசை பயின்ற வாய்ப்பாட்டுக் கலைஞர் டாக்டர் கே. ஓமணக் குட்டிக்கும் வழங்கப்படும்.

வீணைக் கலைஞர் கல்யாணி கணேசனுக்கும் நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணாவுக்கும் டிடிகே விருதுகள் வழங்கப்படும். மியூசிக்காலஜிஸ்ட் விருது, ஹரிகதா விற்பன்னர் பிரமீளா குருமூர்த்திக்கு வழங்கப்படும். சி.பன்னி பாயின் சீடரான இவர், சென்னை பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவுத் தலைவராக இருந்து, தற்போது தமிழ்நாடு நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.

இந்த விருதுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று மியூசிக் அகாடமியில் நடைபெறும் சதஸ்ஸில் வழங்கப்படும்.

நடப்பாண்டுக்கான நிருத்ய கலாநிதி விருதை பிரபல பரதநாட்டியக் கலைஞர் சாந்தா தனஞ்ஜயன் பெறுகிறார். கதகளி மற்றும் கர்னாடக இசையில் தேர்ந்த இவர், தனது கணவர் பிரபல பரதநாட்டியக் கலைஞரான வி.பி. தனஞ்ஜயனுடன் இணைந்து ‘பரத கலாஞ்சலி’ என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். வி.பி. தனஞ்ஜயன் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாசார்யா விருது பெற்றவர். இந்த விருது, மியூசிக் அகாடமியின் நடன விழா தொடக்க நாளான ஜனவரி 3-ம் தேதி அன்று வழங்கப்படும்.

நேற்று நடைபெற்ற சென்னை மியூசிக் அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x