Published : 05 Mar 2025 01:21 PM
Last Updated : 05 Mar 2025 01:21 PM
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற 30 நாட்களில் விடுமுறையில் சென்று பணி மாறுதல் பெற்றிருக்கிறார் ஷேக் முகையதீன். இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு ஒத்து வராததால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என வருவாய்த்துறை சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் தனி மாவட்டமாக கடந்த 2019 நவம்பர் மாதம் 29ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. வருவாய் அலகில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய எட்டு வட்டங்களில் மூன்று வருவாய் கோட்டங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
முதல் மாவட்ட வருவாய் அலுவலராக பிரியா அவரைத் தொடர்ந்து மேனுவல்ராஜ் சுபா நந்தினி ஆகியோர் பணியாற்றிய நிலையில், ஜனவரி மாதம் சுபா நந்தினி பணியிட மாற்றம் செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த ஷேக் முகையதீன் மாவட்ட வருவாய் அலுவலராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிப்ரவரி நான்காம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக ஷேக் முகையதீன் பொறுப்பேற்றுக் கொண்டார். 25 நாட்கள் பணிபுரிந்த நிலையில் ஆளுங்கட்சியின் அழுத்தும் காரணமாக திடீரென நீண்ட நாள் விடுப்பில் சென்றார். மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற 30 நாட்களில் மார்ச் 4ஆம் தேதி தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்த கணேஷ் குமார் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பணியிட மாற்றம் குறித்து வருவாய் துறை வட்டாரத்தில் ஷேக் முகையதீன் நேர்மையானவர் என்றும் அவரை, சட்டத்துக்கு புறம்பான கோப்புகளில் கையெழுத்து இட ஆளும் கட்சியினர் அழுத்தம் கொடுத்ததாகவும், அதில் விருப்பமில்லாத அவர் பணியில் சேர்ந்த சுமார் 25 நாட்களிலேயே விடுப்பில் சென்று பணி மாறுதல் பெற்றுள்ளார் என்றும் பேசப்படுகிறது.
மேலும் ஆட்சபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், நில உச்சவரம்பு சட்டத்தில் எடுக்கப்பட்ட நிலத்தை சில தனியாருக்கு பட்டா வழங்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் விடுப்பில் சென்றதாகவும், ஆளுங்கட்சிக்கு ஒத்து வராததால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் வருவாய்த்துறை சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT