தமிழகத்தில் விரை​வில் 25 மினி ஸ்டேடி​யங்​கள் அறி​விப்பு: துணை முதல்​வர் உதயநிதி தகவல்

தமிழகத்தில் விரை​வில் 25 மினி ஸ்டேடி​யங்​கள் அறி​விப்பு: துணை முதல்​வர் உதயநிதி தகவல்
Updated on
1 min read

சென்னை: நடப்பாண்டில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 25 மினி ஸ்டேடியங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கும் வகையில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அருகே, ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் எனப்படும் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இதில் குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய ஹாக்கி மைதானம், கிரிக்கெட் பயிற்சிக்காக 2 பாக்ஸ் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த விளையாட்டு அரங்கை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மதுரை மாவட்டம் சோழவந்தான், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மினி ஸ்டேடியங்களையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை 9 மினி ஸ்டேடியங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு 22 மினி ஸ்டேடியங்கள் உருவாக்குவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதற்கான டெண்டர்களும் கோரப்பட்டுள்ளன. இந்த பணிகள் எல்லாம் விரைவில் தொடங்கவுள்ளன. இந்த ஆண்டில் 25 மினி ஸ்டேடியங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளோம். அந்தப் பணிகளை 2026 ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தயாநிதி மாறன் எம்.பி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in