

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை தமிழக அரசு நியமித்ததை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளரான ஐ.எஸ்.இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ‘‘ தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற டிஜிபி-யை நியமிக்கும் வகையில் கடந்த 1991-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக ஏற்கெனவே பதவி வகித்த சீமா அகர்வால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியில் நீடித்தார். அதன்காரணமாகவே அவர் நீக்கப்பட்டு, அவருக்குப்பதிலாக சுனில்குமார் நியமக்கப்பட்டார். இதற்கு முன்பாக பல்வேறு காலகட்டங்களில் சுனில்குமார் சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக பதவி வகித்துள்ளார். சுனில்குமாரின் நியமனத்தில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை.
தகுதியின் அடிப்படையிலேயே அவர் சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓய்வு பெற்ற அதிகாரி என்றாலும் வாரியத்தின் தலைவராக அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவரே. தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 11 அதிகாரிகள் பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இதன்காரணமாகவே ஓய்வு பெற்ற டிஜிபியான சுனில்குமார் சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கு விசாரணையை வரும் மார்ச் 17-க்கு தள்ளி வைத்துள்ளார்.