2030-ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமில்லை: பாமக உத்தேச பொருளாதார அறிக்கை சொல்வது என்ன?

2030-ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமில்லை: பாமக உத்தேச பொருளாதார அறிக்கை சொல்வது என்ன?
Updated on
2 min read

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி மேலாண்மையில் தமிழக அரசுக்கு உதவும் வகையில் கடந்த 22 ஆண்டுகளாக நிழல் நிதி நிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், 2024-25-ம் ஆண்டு முதல் பொருளாதார ஆய்வறிக்கையை பாமக நேற்று வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: 2024-25-ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கக்கூடும். நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் தமிழகத்தின் வரி வருவாய் ரூ.1,23,970.01 கோடியாக அதிகரித்திருப்பதால், நடப்பாண்டில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்த மொத்த வருவாய் வரவு இலக்குகளை கிட்டத்தட்ட எட்டிவிட முடியும். மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்திருப்பதால், அதிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பங்கு ரூ.49,754.95 கோடி என்ற இலக்கையும் தாண்டி ரூ.52,491 கோடி கிடைக்கலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழக அரசின் வருவாய் எந்த வகையிலும் குறையாது. அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது, போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் மானியம் ஆகியவற்றால் அரசின் செலவுகள் ரூ.7,000 கோடி வரை உயரும். வருவாய் உபரி எட்டப்பட வாய்ப்பு இல்லை.

2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி தமிழக அரசின் நேரடி கடன் ரூ.9.55 லட்சம் கோடியாக இருக்கும். தமிழகத்தின் மொத்தக் கடன் 2025-26-ம் ஆண்டின் முடிவில் ரூ.15.05 லட்சம் கோடியாக இருக்கும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை இப்போது 7.73 கோடியாக இருக்கும் என்று வைத்து கொண்டால், ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1,94,695 கடன் பெறப்பட்டிருக்கும். ஒரு குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.78 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். தமிழக அரசின் நேரடிக் கடன், பொதுத்துறைக் கடன் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.15.05 லட்சம் கோடி எனக் கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான வட்டியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 21,750 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். 2030-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரம் சாத்தியமில்லை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்துறை உதவி செய்யும்.

நிதிநிலையை மேம்படுத்துவதற்காக தமிழக அரசின் அனைத்து துறைகளுக்குமான நிர்வாகச் செலவுகள் 15 சதவீதம் குறைக்கப்படும். தமிழகத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2029-30-ம் ஆண்டுக்குள் ரூ.62.5 லட்சம் கோடியாக உயர்த்த திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 14 சதவீதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கை 50 சதவீதமாக உயர்த்தும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை ஆகியவற்றை அடிப்படை வரிகளுடன் இணைக்க வேண்டும். மாநிலங்களின் வருவாய் பங்கை அதிகரிக்கும் நோக்குடன் மேற்குறிப்பிட்ட சீர்திருத்தங்களை செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். மாநில அரசு நிதி வலிமையை பெருக்கிக்கொள்ள வேண்டுமானால், வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அதன் மூலம் தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தேவையான திட்டங்களை தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக செயல்படுத்த முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in