

லோக் ஆயுக்தா தொடர்பாக பொது விவாதம் செய்ய அமைச்சர் ஜெயக்குமாருக்கு அறப்போர் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், தமிழக அரசு மக்கள் கருத்தைக் கேட்டபின் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கையில், "பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஊழல் ஒழிப்பு லோக் ஆயுக்தா சட்டத்தை இந்த சட்டப்பேரவை கூட்டம் முடிவதற்குள் நிறைவேற்றப்போவதாகக் கூறியுள்ளார். இந்த கூட்டத் தொடர் முடிய திங்கட்கிழமை ஒரு நாள் உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் ஐஏஎஸ் அதிகாரிகளையும் விசாரிக்கக்கூடிய லோக் ஆயுக்தா சட்டத்தை மக்கள் கருத்தும் கேட்காமல் விவாதமும் இல்லாமல் நிறைவேற்ற விரும்புவது ஏன்? அறப்போர் இயக்கம் அமைச்சர் ஜெயக்குமாரை லோக் ஆயுக்தா பொது விவாதத்திற்கு அழைக்கிறது.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி ஜனவரி 2014-ல் சட்டமாக்கப்பட்டது. அதன் ஒரு வருட காலத்திற்குள் மாநிலங்கள் அனைத்தும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரிவு 63-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதை நிறைவேற்றாமல் இருக்க 4 ஆண்டுகளாக அனைத்து தாமதப்படுத்தும் வியூகங்களையும் கையாண்டது.
தமிழக அரசின் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் அஸ்வினி குமார் உபாதியாய் vs இந்திய அரசு மற்றும் பலர் வழக்கில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே இந்த லோக் ஆயுக்தா வேலையைச் செய்து கொண்டிருக்கிறது என்று கண்காணிப்பு ஆணையம் இருக்கும் பொழுது லோக் ஆயுக்தா அமைப்பதற்கான தேவைக்கான சம்பந்தம் என்னவென்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
இது தெளிவாக லோக் ஆயுக்தா அமைப்பதற்கான எந்த ஒரு எண்ணமும் இல்லாததைக் காட்டுகிறது. மத்தியில் சட்டத்திருத்தம் வரக் காத்திருக்கிறோம் என்ற விவாதம் உள்பட அனைத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து ஜூலை 10-ம் தேதிக்குள் லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளது. இதனாலேயே தமிழக அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறது.
அறப்போர் இயக்கம் தமிழகத்தில் சுதந்திரமான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவதற்காக மூன்று ஆண்டுகளாக பரப்புரை செய்து மக்கள் கருத்துகளையும் பெற்றும் மாதிரி சட்டம் ஒன்றை வெளியிட்டது.
அறப்போர் இயக்கம் கடந்த மே 18 அன்று லோக் ஆயுக்தா சட்ட முன்வரையை மக்கள் பார்வைக்கு வைத்து, மக்கள் கருத்துக் கேட்பு நடத்தவேண்டுமென்று தலைமைச் செயலாளர், சட்ட அமைச்சர், சட்டச் செயலாளர் என அனைவருக்கும் மனு அனுப்பினோம். தலைமைச் செயலாளர் அலுவலகம் அதை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு அசலாக அனுப்பி வைத்தது. துறையையும் அமைச்சர் ஜெயக்குமாரையும் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த பின்னரும் எந்த பதிலும் இல்லை. இன்று நாடாளுமன்ற அனைத்து சட்டமுன்வரைவையும் மக்கள் பார்வைக்கு வைக்கும் போது முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டத்திற்கு தமிழக அரசு மக்கள் கருத்து கேட்க மறுப்பது ஏன்?
தமிழக முன்னாள் முதல்வர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர். தமிழகத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஊழலுக்கு முதல் கட்ட விசாரணை கூடச் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. எனவே சுதந்திரமான, வலுவான ஒரு லோக் ஆயுக்தா அமைவது அவசியம்.
அரசு ஒரு நீர்த்துப் போன லோக் ஆயுக்தாவை அமைக்கும் வகையில் சட்ட வரைவை வெளியிடும் என்று அச்சம் எழுகிறது. எனவே வரைவுத் திட்டத்தை அரசு, மக்கள் கருத்துக் கேட்புக்கு ஒரு மாத காலத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பேறப்படும் மக்களின் கருத்துகளை ஒட்டி சட்டம் வலுவானதாக ஆக்கப்பட வேண்டும்.
அரசு மக்கள் கருத்துக் கேட்பு நடத்தாததால் அறப்போர் இயக்கம் நாளை (ஞாயிறு) மாலை 4.30 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உள்ளோம். இதற்கு அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை அழைத்துள்ளோம். மக்கள் கருத்தை கேட்காமல் வலுவற்ற லோக் ஆயுக்தா கொண்டு வரும் பட்சத்தைல் அறப்போர் இயக்கம் அதை கடுமையாக எதிர்த்துப் போராடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.