Published : 04 Mar 2025 06:15 AM
Last Updated : 04 Mar 2025 06:15 AM
சென்னை: சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை அடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், அத்திரையரங்கில் நேற்று சோதனையிட்டனர்.
அப்போது திரையரங்கில் காலாவதியான உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது: இந்த காலாவதியான குளிர்பானங்கள், பாப்கார்ன்கள் கேரளாவில் இருந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
அந்நிறுவனத்துக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த குளிர்பானங்களின் காலாவதி தேதி கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையிலும், தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதை யொட்டி கேன்டீன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலாவதியான உணவு பொருட்கள் குறித்து சோதனைகள் மேற்கொள்வதற்காக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில் அனைத்து திரையரங்குகளுக்கும் நேரடியாகச் சென்று சோதனை மேற்கொள்ளவுள்ளது என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT