தமிழகத்தில் அரசு மருத்​து​வர்​கள் அடுத்​தடுத்து போராட்​டம் நடத்தப்போவதாக அறி​விப்பு - காரணம் என்ன?

தமிழகத்தில் அரசு மருத்​து​வர்​கள் அடுத்​தடுத்து போராட்​டம் நடத்தப்போவதாக அறி​விப்பு - காரணம் என்ன?
Updated on
1 min read

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவர்களின் பணி சூழல் இங்கு ஆரோக்கியமானதாக இல்லை. அதிக பணிச்சுமை, சிரமங்கள், பல்வேறு சவால்களுடன் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இளைய மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. கரோனா பேரிடரின்போது பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா அரசு வேலை கேட்டு குழந்தைகளுடன் சுகாதாரத் துறை அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்தும், சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டும், அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்கவில்லை.

மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் அடிப்படை ஊதியம் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய போராட்டத்தில் மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இழக்க நேரிட்டது மிகவும் வேதனைக்குரியது.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை தரப்பட வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி அதன் பேரில் அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 18-ம் தேதி முதல் முதல்வருக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் மின்னஞ்சல் அனுப்புதல் அனுப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது.

19-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக வளாகத்தில் தர்ணா நடத்துவது, ஜூன் 11-ம் தேதி மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மறைந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா உடன் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in