மாநகராட்சி மண்டலங்கள் 20 ஆக உயர்வு: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர் நேரு விரைவில் ஆலோசனை

மாநகராட்சி மண்டலங்கள் 20 ஆக உயர்வு: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர் நேரு விரைவில் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அதை அமல்படுத்துவது தொடர்பாக எம்.பி., எம்எல்ஏ.க்களுடன் அமைச்சர் கே.என்.நேரு விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. 15 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி மண்டலங்களுக்குட்பட்ட நிர்வாக பகுதிகளை, தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்தது.

அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த பிப்.28-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே செயல்பட்டு வந்த மணலி மண்டலம் நீக்கப்பட்டு, அதன் பகுதிகள், திருவொற்றியூர், மாதவரம் ஆகிய மண்டலங்களுடன் சேர்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மேலும் 6 புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மண்டல நிர்வாக எல்லையை மாற்றுவது, புதிய மண்டலங்களுக்கான அலுவலக கட்டிடம், அதற்கான பணியாளர்கள் நியமனம், புதிய 6 மண்டலங்களுக்கான, மண்டலக்குழு தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, புதிததாக 6 மண்டலங்கள் உருவாக்குவதன் மூலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்படும் தொடர் செலவினம், அதை சமாளிப்பது குறித்து உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in