

மதுரை: உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அரசும், சட்டத் துறையும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.
உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைபிடிக்கக் கோரி சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வாஞ்சிநாதன், பசும்பொன் பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தற்போது உயர் நீதிமன்றங்களில் 12 நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தென்மாவட்டங்களைச் சேர்ந்த பிரமலை கள்ளர், மறவர், புதர வண்ணார், ஆதிதிராவிடர் உள்ளிட்ட சில சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும். ஏற்கெனவே இது தொடர்பாக பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து தமிழ்நாடு சட்ட அமைச்சரிடமும் வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.
சமூக நீதியை நிலை நாட்ட அரசும், சட்டத் துறையும் கவனம் செலுத்த வேண்டும். உரிய வழிகாட்டுதல் செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம். இந்தக் கோரிக்கையை நாங்களும் ஆதரிக்கிறோம். தென்மாவட்ட ஜனநாயக சக்திகள் இணைந்து மதுரையில் சமூக மதநல்லிணக்க பேரணிக்கு முயற்சி எடுத்துள்ளனர். மார்ச் 9-ம் தேதி நடக்கும் இந்தப் பேரணிக்கு மதுரை மாநகர காவல் துறை உரிய அனுமதி மறுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. யாருடைய உணர்வுகளையும் தூண்டும் வகையில் நடத்தும் பேரணி அல்ல. யாருக்கும் எதிரானதும் இல்லை. காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்.
திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. எங்களுக்குக் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கட்டுக்கோப்புடன் இருக்கிறோம். இல்லாததை இட்டுக்கட்டி சிலர் பேசுகின்றனர். வெளிப்படையாகப் போராட்டம் நடத்துகிறோம். கருத்துகளைத் தெரிவிக்கிறோம். முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் எங்களுக்கு இல்லை. கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. அதுபோன்று கூட்டணியைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது” என்று அவர் கூறினார்.
முன்னதாக, தொல்.திருமாவளவன் ஏற்கெனவே தான் பணிபுரிந்த மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள தடய அறிவியல் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவருடன் பணியாற்றிய சில அலுவலர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த திருமண விழாவிலும் அவர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். மாலையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார். அவருடன் கட்சியின் கொள்கை பரப்பு துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் கனிய முதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.