“அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்த தயாராகிறார் முதல்வர்” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Updated on
1 min read

கோவை: பாதிப்பு ஏற்படாது என மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்த பின்னரும் தொகுதி வரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்ற ஒரு நாடகம் நடத்துவதற்கு மாநிலத்தின் முதல்வர் தயாராகி வருகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

‘வளம்’ திட்டத்தின்கீழ் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான நிதி மேலாண்மை பயிற்சி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகு எம்எலஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கத் துறைகளை பல்வேறு மாற்றங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பதற்காக, மாறி வரக்கூடிய உலக சூழ்நிலைகளுக்கு ஏற்ப கல்வி திட்டம் முதற் கொண்டு, அரசாங்கத்தினுடைய பல்வேறு கொள்கை முடிவுகள் வரை பெரிய மாற்றத்தை மத்திய அரசு, அமல்படுத்தி வருகிறது.

புதிய கல்விக் கொள்கை மூலம், இந்திய நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் ஒரே கருத்தோடு கல்வி பயில வேண்டும் என பிரதமர் நினைக்கிறார். ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் வசதி வாய்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு பல்வேறு மொழிகளை கற்றுக் கொடுத்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு மீண்டும் மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. இந்தி கட்டாயம் அல்ல. இந்தி திணிக்கப்படவில்லை.

அதே போல தொகுதி வரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்ற ஒரு நாடகம் நடத்துவதற்கு மாநிலத்தின் முதல்வர் தயாராகி வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் அதிகரிப்பு போன்றவற்றை மடைமாற்றம் செய்ய இந்த முயற்சியை முதல்வர் மேற்கொள்கிறார். ஆனால் உண்மை நிலை மக்களுக்கு நன்று தெரியும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி வரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்த பின்னரும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி அனைவரும் அவரது பின்னால் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரியமே தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேசுவது தான். இந்திய ஆட்சி பணியில், நற்பெயர் பெற்றவர் அண்ணாமலை. தேசியக் கட்சியினுடைய மாநில தலைவரை பார்த்து தரம் தாழ்ந்த விமர்சிக்கின்றனர் என்றால் அவர்களின் தரம் அவ்வளவு தான்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in