

சென்னை: சாலையோர வியாபாரிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நகர விற்பனைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலம் பி,ஹேமகணேஷ், வடபழனி பி.மதன்குமார், தி.நகர் செல்லம்மாள், மீனாட்சி, பழைய பல்லாவரம் சேகர், தேனாம்பேட்டை எஸ்.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னையில் சாலையோரம் மற்றும் தெருவோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி மாநகராட்சிக்கு முறையாக விண்ணப்பித்தும் எங்களது மனுக்கள் பரிசீலி்க்கப்படவில்லை. எனவே, எங்களது அன்றாட பிழைப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும் சாலையோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் கார்த்திகா அசோக் மற்றும் கே.லவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மாநகராட்சி தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி வழக்கறிஞர் டிபிஆர்.பிரபு ஆகியோர் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சியில் மொத்தம் 561 சாலைகளும் 35 ஆயிரத்து 730 தெருக்களும் உள்ளன. 70 காய்கறி அங்காடிகள் உள்ளன. இதில் 253 சாலைகளின் ஓரங்களில் வியாபாரம் செய்ய தகுதியானவை. 149 சாலைகள் வியாபாரம் செய்ய தகுதியற்றவை.
எந்தெந்த பகுதிகளில் வியாபாரம் செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுக்க மாநகராட்சி ஆணையர் தலைமையிலான நகர விற்பனைக் குழுவுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 23 ஆயிரத்து 232 சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தற்போது ஆயிரத்து 896 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதிகள், “ஒரே ஒரு நகர விற்பனைக் குழுவால் அனைத்து பகுதிகளிலும் அனுமதி கோரியுள்ள மனுக்களை எப்படி விரைவாக பரிசீலித்து அனுமதி வழங்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளின் மனுக்களை உடனுக்குடன் பரிசீலி்க்கும் வகையில் தனித்தனியாக நகர விற்பனைக் குழுக்களை அமைக்க வேண்டும். இ்ந்த அனைத்து குழுக்களுக்கும் மாநகராட்சி ஆணையர்தான் தலைவராக பதவி வகிக்க வேண்டும்.
இந்த சட்டத்தின்கீழ் வியாபாரிகளுக்கான குறைதீர் குழுவையும் அமைக்கலாம். அந்த குறைதீர் குழுவுக்கு சிவில் நீதிபதி அல்லது குற்றவியல் நடுவர் தலைவராக பதவி வகிக்க வேண்டும். இந்த குறைதீர் குழு வியாபாரிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நகர விற்பனைக் குழுவை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு 2 மாதங்களுக்குள் மாநகராட்சி நிர்வாகம் கடிதம் எழுத வேண்டும். அந்த கடிதத்தின் மீது நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் அடுத்த 2 மாதங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி நிர்வாகம் வரும் ஏப்.26-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.