

புதுச்சேரி: அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நடப்பாண்டில் மாற்றப்பட்ட நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் 102 தனியார் பள்ளிகளில் படிக்கும் மற்றும் தனி தேர்வர்கள் 8,105 ஆயிரம் பேருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
புதுச்சேரியில் தனிகல்வி வாரியம் இல்லை. தமிழக அரசு பாடத்திட்டத்தையே அவர்களும் பின்பற்றி வந்தனர். இந்தநிலையில் அங்கு அரசுப்பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் முதல் வகுப்பிலிருந்து 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலானது. நடப்பு கல்வியாண்டில் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலானது. அதைத்தொடர்ந்து இம்முறை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
அதேபோல் பல தனியார் பள்ளிகளும் வேறு பாடத்திட்டத்துக்கு மாறத்தொடங்கி விட்டன. ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது அப்பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
இதுதொடர்பாக புதுவை அரசு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 பொது தேர்வுக்கு தேர்வு துறையால் நாளை 3-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட தேர்வுகால அட்டவணைப்படி பொதுத்தேர்வுகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் நடத்தப்படுகிறது.
புதுவையில் 20 மையங்களும், காரைக்காலில் 5 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், நிலையானபடை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு புதுவையில் பகுதியில் பிளஸ் 2 தேர்வினை 86 தனியார் பள்ளியை சேர்ந்த 6 ஆயிரத்து 992 மாணவர்களும், 362 தனி தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர். காரைக்காலில் 16 தனியார் பள்ளியைச் சேர்ந்த 640 பள்ளி மாணவர்களும், 111 தனித் தேர்வர்களும் என மொத்தம் 8105 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வு மையத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் தேர்வின்போது தடையின்றி மின்சார சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் செல்போன் உட்பட எந்த தகவல் தொடர்பு சாதனமும் கொண்டுவரக்கூடாது. தேர்வுக்கூட அனுமதிசீட்டு இல்லாத மாணவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.