

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கிராவல் மண் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கோபிநயினார் உட்பட 44 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் அடுத்த கரடிபுத்தூர் கிராமத்தில் கள்ளாங்குத்து வகையை சேர்ந்த ஐந்து ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்நிலத்தில், சென்னை உள்வட்ட சாலைப்பணிக்காக தனியார் கிராவல் மண் குவாரி செயல்பட சமீபத்தில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கிராவல் மண் குவாரியை கடந்த பிப்ரவரி 24ம் தேதி முற்றுகையிட்டு, பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பிப்ரவரி 28 - ம் தேதி கிராவல் மண் குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கரடிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று, தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்.
இந்நிலையில் திரைப்பட இயக்குநரும், விசிக நிர்வாகியுமான கோபிநயினார் மற்றும் பொதுமக்கள் கரடிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கிராவல் மண் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டோரில் 45- க்கும் மேற்பட்டோரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து பஸ்ஸில் ஏற்றினர். அதில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கரடிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், சட்டவிரோதமாக கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக திரைப்பட இயக்குநர் கோபிநயினார் உட்பட 44 பேர் மீது பாதிரிவேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க>> கரடிபுத்தூரில் கிராவல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்க: பாஜக