Published : 02 Mar 2025 01:19 PM
Last Updated : 02 Mar 2025 01:19 PM
சென்னை: இசைஞானி இளையராஜா மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அது தொடர்பான வீடியோவை முதல்வர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜாவும் - முதல்வர் ஸ்டாலினும் அன்பொழுக பேசிக் கொள்ளும் காட்சிகள் கவர்கின்றன. அந்த உரையாடலின்போது, “ஐயா தான் ‘இசைஞானி’ பட்டம் கொடுத்தார். அதை மாற்றவே முடியவில்லை.” என்று ஸ்டாலினிடம் இளையராஜா நெகிழ்ந்தார். ஸ்டாலினும் அதனை ஆமோதித்து ‘ஆம் அதுவே நிலைத்துவிட்டது’ என்றார் பெருமிதத்துடன்.
வீடியோ பின்னணியில் மெளனராகம் படத்தின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு..’ பாடலின் பேக்கிரவுண்ட் ஸ்கோர் இசைக்கப்பட இருவரின் சிரிப்பும் இணைந்து கொண்டது. இருவரும் இன்னும் பல நெகிழ்வாக நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். ‘காரில் போகும்போது எப்போதுமே உங்கள் இசையைத் தான் கேட்கிறேன்’ என மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர், ‘இசைஞானி என்ற பெயரை ஐயா தான் வைத்தார்’ என்றார் இளையராஜா. அதற்கு ஸ்டாலின், “எத்தனை பட்டங்கள் வந்தாலும் கலைஞர் கொடுத்த இசைஞானி பட்டமே நீடிக்கிறது.” என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து “உங்களுடைய பிறந்தநாள் ஜூன் 3 தான் ஆனால் ஜூன் 2 என்று மாற்றி வைத்துக் கொண்டீர்களே” எனக் கேட்க, “இல்லை அப்பாவுக்காக” என்றார் இளையராஜா.
இந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது...ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்” என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில்… pic.twitter.com/bv9AUVxpl0— M.K.Stalin (@mkstalin) March 2, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT