

சென்னை: சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டோருக்கு எதிரான ஆள்கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்குமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் கம்மாபட்டி வி. ரவிச்சந்திரன் 2018-ல் சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான ராஜவர்மன், தங்க முனியசாமி, நரிக்குடி ஐ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து பட்டாசு ஆலை நடத்தி வந்தார். 2019-ல் ராஜவர்மன் உள்ளிட்ட மூன்று பேரும் ட தங்களுக்கான பங்குத்தொகையைப் பெற்றுக்கொண்டு பட்டாசு ஆலை நிர்வாகத்தில் இருந்து விலகிக்கொண்டனர்.
இந்நிலையில், தொழில் முன்விரோதம் காரணமாக 2019 அக்டோபரில் தன்னை கடத்திச் சென்று ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு உத்தரவிடக் கோரி கம்மாபட்டி ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதன்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுக நிர்வாகி தங்க முனியசாமி, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ஐ.ரவிச்சந்திரன், அவரது மனைவி அங்காளேஸ்வரி, ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன், சிவகாசி சிறப்பு எஸ்.ஐ. முத்துமாரியப்பன் ஆகிய 6 பேர் மீது ஆள்கடத்தல், கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி, புகார்தாரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்த வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் எதிர்மனுதாரர்கள் செயல்பட்டு வருவதாகவும், தங்களுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.