பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார் ஸ்டாலின்: தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார் ஸ்டாலின்: தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

Published on

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்தநாளை நேற்று விமரிசையாகக் கொண்டாடினார். இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் அவரவர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது சகோதரர் மு.க.அழகிரி தனது பேரனுடன் வந்து வாழ்த்தினார். தொடர்ந்து நேற்று ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோருடன் முதல்வர் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

சென்னை, வேப்பேரி பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றார். தொடர்ந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை கருணாநிதியின் படத்தை மலர் தூவி வணங்கினார். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி படத்துக்கும் மரியாதை செலுத்தினார். அங்கு ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அப்போது, சகோதரியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து திமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த முதல்வரை தொண்டர்கள் இசை வாத்தியம் முழங்க வரவேற்றனர். அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரும் வரவேற்றனர். பின்னர் மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் பிரம்மாண்ட கேக்கை வெட்டி நிர்வாகிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல்வருக்கு புத்தகம், பொன்னாடை உள்ளிட்ட பரிசுகளை அளித்தனர். இதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, புதுச்சேரி முன்னாள் முதல்வர்கள் நாராயணசாமி, வைத்தியலிங்கம், செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், பெ.சண்முகம், இரா.முத்தரசன், காதர்மொய்தீன், துரை.வைகோ, எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், கருணாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறினா்.

இதேபோல், அமைச்சர்கள் கீதாஜீவன், செந்தில்பாலாஜி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், சா.சி.சிவசங்கர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவரும் குன்றத்தூர் (தெ) ஒன்றியச் செயலாளருமான படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல், மாநிலம் முழுவதும் திமுக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுகவினர் முதல்வர் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் முதல்வரே அருகில் சென்று வாழ்த்து பெற்றார். ஈரோடு மாவட்டம் தொண்டங்கோப்பு, கரும்பாறை மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் இந்தி தெரியாது போடா, தமிழ் வாழ்க என முழக்கமிடும் 250 கிலோ எடையுள்ள பொம்மை சிங்கம் பரிசாக அளிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in