சென்னையில் 6 புதிய மாநகராட்சி மண்டலங்கள் உருவாக்கம்!

சென்னையில் 6 புதிய மாநகராட்சி மண்டலங்கள் உருவாக்கம்!
Updated on
2 min read

சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20-ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011-ம் ஆண்டு 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு 426 சதுர கிமீ பரப்புடன் அதன் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. மாநகராட்சியின் மக்கள்தொகை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 66.72 லட்சம். தற்போதைய மக்கள்தொகை சுமார் 85 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியானது, தற்போது 15 மண்டலங்களில் 200 வார்டுகளை கொண்டுள்ளது.

மாநகராட்சியின் எல்லைகளுக்குள் சட்டப்பேரவையின் 22 தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. இந்நிலையில், மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒருசேர அமையவில்லை. இதன் காரணமாக, பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அதனால் மாநகராட்சி மண்டலங்களுக்குட்பட்ட நிர்வாக பகுதிகளை, தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு ஏப்.7-ம் தேதி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாநகராட்சியின் மண்டலங்களுக்கிடையே தற்போது மக்கள் தொகை, மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரப்பளவு ஆகியன ஒரே சீராக அமையவில்லை. எல்லை விரிவாக்கத்துக்கு முன்னதான மாநகராட்சியின் மையப்பகுதிகள் அடங்கிய மண்டலங்களில் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை அடர்த்தி அதிக அளவில் உள்ளது.

மண்டலங்களுக்கிடையே மனிதவளம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஒரே சீராக பகிர்ந்தளிப்பதில் கடுமையான சவால்கள் எதிர்நோக்கப் படுகிறது. இதன் காரணமாக, பல்வேறு மண்டலங்களில் குறிப்பாக மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை அடர்த்தி அதிகமுள்ள மண்டலங்களில் மாநகராட்சியின் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் கடும் நிர்வாக இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, 426 சதுர கிமீ பரப்பளவில் விரிந்துள்ள மாநகரின் அனைத்து பகுதி மக்களுக்கும் மாநகராட்சியால் வழங்கப்படும் சாலைகள், தெரு விளக்குகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சேவைகள் முழுமையான வகையில் வழங்க ஏதுவாக மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து, 20 ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 15 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி நகராட்சி நிர் வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் கடந்த பிப்.28-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே இருந்த மணலி மண்டலம், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங் களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 6 புதிய மண்டலங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

அதன்படி கொளத்தூர், வில்லிவாக்கம். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி. தியாகராயநகர், விருகம்பாக்கம். பெருங்குடி- சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மண்டலங்களில் எந்தெந்த வார்டுகள் இடம்பெற்றுள்ளன என்பன குறித்த விவரங்களும் அரசாணையில் இடம்பெற்றுள்ளது. இந்த 20 மண்டலங்களின் குழு தலைவர்களையும் புதிதாக மறைமுக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in