

திருச்சி: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான நிதியுதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை. வேந்தருமான கே.ஆர்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். துணைவேந்தர் வி.நாகராஜ், உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், மரியா கிளீட், ஷமிம் அகமது, முன்னாள் நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் 135 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: தேசிய சட்டப் பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுடன், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பயன்படுத்தி, மாணவர்களின் சான்றிதழ்களை டிஜிலாக்கரில் சேமித்து வைத்திருப்பது பாராட்டத்தக்கது.
இப்பல்கலைக்கழகம் பின்தங்கிய சமுதாயத்தினரின் முன்னேற்றத்துக்கும் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும். இதன் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான நிதியுதவியை தமிழக அரசு வழங்க வேண்டும். ஒரு சட்டப் பட்டதாரி சட்ட அறிவோடு, மனஉறுதியையும் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் தங்களது பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் சவால்களை முழுமையாக ஆராய்வது முக்கியம்.
நல்லொழுக்கத்தைப் பின்பற்றுவதும் மிகவும் அவசியம். நேர்மையான குணமே ஆன்மிக வலிமைக்கு அடித்தளமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.