

சென்னை: ‘‘மாநில அரசின் கடுமையான இருமொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் இருமொழிக் கல்வி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: தென் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.
இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும், இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப் பொருள், துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.
மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, சட்டத் துறை அமைச்சர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன.
சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழகத்தின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் ரவி. தமிழகம் எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா? கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழகத்தின் வளர்ச்சி இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களே சொல்லும். அதையெல்லாம் ஆளுநர் ரவி படித்தால்தானே? தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை. தமிழ்-தமிழ்நாடு-தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆளுநர் ஆர்.என்.ரவி, புதிய தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் நோக்கத்துடன் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்து அடிப்படை ஆதாரமற்றது, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு கடைப்பிடித்து வரும் இரு மொழிக் கொள்கையால் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை, பல துறைகளிலும் முன்னேறி முதன்மை இடத்துக்கு வந்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது டிவிட்டர் பதிவில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேசியக் கல்விக் கொள்கையை வேண்டாம் என்கிறோம். தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் இதைத் தான் சொல்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள சில விஷயங்களை வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். குறிப்பாக மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது என தெளிவாக சொல்லியிருக்கின்றனர். அப்படியிருக்க இது தொடர்பாக ஆளுநர் பேச அவசியமில்லை’’ என தெரிவித்துள்ளார்.