

சென்னை: “நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (பிப்.28) இரவு 8 மணிக்கு ஆஜராகிறேன்,” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த வழக்கு புதிது அல்ல. நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நான் ஏற்கெனவே 3 மணி நேரம் விளக்கம் அளித்துவிட்டேன். மறுபடியும் அதேதான். மீண்டும் ஒருமுறை அதை கேட்க ஆசைப்படுகின்றனர். சரி, அதை சொல்லிவிடுவோம். அவ்வளவுதானே.
நடிகை விஜயலட்சுமி பிரச்சினையை அவ்வப்போது எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இப்பிரச்சினையை எடுப்பார்கள். கருத்தியல் ரீதியாக என்னை சமாளிக்க முடியாத நேரங்களில் இந்த பிரச்சினையை இழுத்துக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வந்து இதுபோல் பேசிவிட்டு சென்றுவிடுவதை அனைவரும் அறிவார்கள்.
இந்த வழக்கு விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு இப்போதே வருவதாக கூறினேன். இரவு எட்டு மணிக்கு வருமாறு கூறியுள்ளனர். மேலும், ஒரு சில அதிகாரிகளின் முறையற்ற நடவடிக்கைகளால், நல்ல நேர்மையான அணுகுமுறை கொண்ட காவல் துறை அதிகாரிகள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் இது ஒரு களங்கம்.
இதற்கு முன்னா் எத்தனையோ பேர் எனக்கு அழைப்பாணை கொடுத்துள்ளனர். நெடுநேரம் காத்திருந்து அழைப்பாணை கொடுத்த காவலர்களும் உண்டு. அவர்கள் எல்லாம் இதுபோல ஊடகங்களை அழைத்து வந்து எல்லாம் கொடுக்கவில்லை. சம்மன் எனக்குதான், மக்களுக்கு இல்லை. எனவே, அதை கதவில் ஒட்டிச் செல்வது எல்லாம் ரொம்ப அநாகரிகமானது. சம்மன் எனக்கு வந்தால், நான் கையெழுத்திட்டுத்தான் வாங்க வேண்டும். அல்லது என்னுடைய வழக்கறிஞர் வாங்க வேண்டும். கதவில் ஒட்டிவிட்டுச் செல்லும்போது அதில் என்னுடைய கையெழுத்து இல்லை. கையெழுத்து இல்லாமல் கொடுப்பதாக இருந்தால், என்னுடைய மனைவியிடமே கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம்.
ஆனால், அதை கதவில் ஒட்டி, ஊடகங்கள் வந்து காத்திருந்தன. எனக்கு வரும் சம்மனை அனைவரும் படிக்க வேண்டிய அவசியம் இல்லையே. எனவே அந்த அணுகுமுறையே தவறு, அவசியமற்றது தேவையில்லாத ஒன்றாகத்தான் நான் நினைக்கிறேன். சம்மனை ஒட்டும்போது யாரும் தடுக்கவில்லை. அது என்ன கதவில் ஒட்டுவது. அது என்ன கதவுக்கான சம்மனா? கதவு வந்து பதில் சொல்லுமா இப்போது?
என்னுடைய வாட்ஸ் அப்புக்கு அந்த சம்மனை அனுப்பியிருக்கலாம். அதைவிடுத்து நான் ஓசூரில் இருக்கும்போது திட்டமிட்டு என்னை அவமானப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்று இவ்வாறு செய்துள்ளனர். ஒரு வீரனை எப்போதும் வீரனாக எதிர்கொள்ள வேண்டும். கோழைகள் எப்போதும் பெண்களின் முதுகுக்குப் பின்னால் நின்றுகொள்வார்கள். ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சிக் காலத்தில், இந்த புகாரை விசாரணைக்கு எடுப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் இப்பிரச்சினையை எடுத்துக் கொள்கின்றனர்,” என்று அவர் கூறினார்.