Published : 18 Jul 2018 08:04 PM
Last Updated : 18 Jul 2018 08:04 PM

வருமான வரித்துறை ரெய்டு; முதல்வர் மவுனம் ஏன்?- பதவி விலக மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

இதற்கு முன்னர் நடந்த ரெய்டுகளில் கைப்பற்றப்பட்ட பணம், குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரே நிறுவனத்துக்கு அரசு டெண்டர் வழங்கி ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளால் மேற்கொண்டு வரும் சோதனைகளில் (ரெய்டுகளில்) பல நூறு கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம், வைரம் மற்றும் நகைகள், பல நூறு கோடி பெருமான சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மாநிலத்தையே அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளன.

ஏற்கெனவே சத்துணவு திட்டத்துக்கு முட்டை மற்றும் மாவுப் பொருட்கள் வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிறிஸ்டி நிறுவன உரிமையாளர்கள், உறவினர்கள், ஊழியர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில நடத்தப்பட்ட சோதனையில் 5000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சுமார் 1350 கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிறுவனத்திடமிருந்து இத்தகைய முறைகேட்டு சொத்துகள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தங்களுக்கு பொறுப்பாக இருக்கிற அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் எவ்வளவு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது அறிந்த ஒன்றே.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைக்கு சாலை செப்பனிடும் பணிக்கு கடந்த பல ஆண்டுகளாக எஸ்.பி.கே. என்ற நிறுவனத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியம் பங்குதாரராக உள்ளார்.

ஆக, முதல்வரும், பல ஆண்டுகளாக இத்துறைக்கு பொறுப்பாக உள்ள எடப்பாடி பழனிசாமி, அவரது சம்மந்தி பங்குதாரராக உள்ள நிறுவனத்திற்கு மட்டும் ரூ. 7000 கோடிக்கு மேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி நேரடியாக இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், ஊழியர்கள் வீடுகளிலிருந்து ரூ. 250 கோடி பணமும், 100 கிலோவிற்கு மேல் தங்கம், வைரம், நகைகள் மற்றும் சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவரது வீட்டிலிருந்து மட்டும் 29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா மேம்பாலத்திற்கு கீழே இருக்கிற குப்பைத் தொட்டியில் இருந்தும் இரண்டு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து ரூ.30 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட நடைமுறையினை மாற்றி ஜெயலலிதா அரசில், மாவட்டங்களில் உள்ள மாவட்ட முக்கிய சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு செப்பனிட்டு பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிடுவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டது.

அப்போதே சாலைகளை தனியார் கட்டுப்பாட்டில் விடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக குரெலெழுப்பியது. அதையும் மீறி அதிமுக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டுகளில் கோவையில் இருக்கிற பொள்ளாச்சி டிவிசன், திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மொத்த சாலைகளும் (அதாவது கிராம நகர்ப்பற சாலைகள் தவிர) தனியார் நிறுவனங்களின் கையில் குறிப்பாக, இந்த எஸ்.பி.கே. நிறுவனத்திடம் ஒப்பந்தம் அடிப்படையில ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சாதாரணமாக ஒரு கிலோ மீட்டர் சாலையை செப்பனிட, பராமரிக்க அதிகபட்சம் ரூ. 35 லட்சம் செலவாகும் என்ற நிலையில், இந்த நிறுவனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 1 கோடி என்ற அதீத மதிப்பீடு செய்து நிதி வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக விருதுநகர் மாவட்டத்தில் 641 கி.மீ. சாலைக்கு 582 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டதுடன் இதற்கு மேல் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு 5 சதமானம் கூடுதல் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களுக்கு பலரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும் விண்ணப்பிப்பதற்கான தகுதி அதிகமாக தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்.பி.கே. நிறுவனம் உள்ளிட்ட இரண்டு, மூன்று நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிக தகுதி தீர்மானிக்கப்படுவதால் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டில் உள்ள ஒப்பந்தக்காரர்கள் இத்தகைய டெண்டர்களில் பங்கேற்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டு விடுகிறது.

இவ்வாறாக நெடுஞ்சாலைத்துறையில் எல்லை தாண்டிய ஊழல் முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதேபோன்று தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. இதே காலத்தில் துணை முதல்வர், அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே இவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆக மொத்தத்தில் அதிமுக அரசு அதன் அமைச்சர்கள் மக்கள் வரிப்பணத்தை மொத்தமாக அபகரிப்பதே குறியாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை.

இத்தகைய அதிமுக அரசு இனியும் பதவியில் நீடிப்பதற்கு அருகதையற்றதாகும். அதிலும் குறிப்பாக தமிழக முதல்வரும், அவரது நெருங்கிய உறவினர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்.

இத்தகைய ஊழல், முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள், அமைச்சர்கள், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் முறையான விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் இப்படி ஊழல் தலைவிரித்தாடுகின்ற சூழ்நிலையில் மத்திய வருமான வரித்துறை தொடர்ந்து சோதனைகள் நடத்தி வருகின்றன. கடந்த ஓராண்டில் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அவர் நெருங்கிய நண்பர் கரூர் அன்பு நாதன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் பங்களா, சசிகலாவின் உறவினர்கள் வீடுகள், டி.டி.வி. தினகரன் வீடுகள் போன்ற ஏராளமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இச்சோதனைகளில் மதிப்பிட முடியாத அளவிற்கு கோடி, கோடியாய் பணம், சொத்துகளுக்கான ஆவணங்கள், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மீது முறையான வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாக எந்தத் தகவலும் தற்போது இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் என்னவாயிற்று என்பதும் மர்மமாகவே உள்ளது.

இத்தகைய சோதனைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய வருமான வரித்துறை எந்த விளக்கத்தையும் பொதுமக்களுக்கு அளிக்கவில்லை. ஆக மொத்தத்தில் மத்திய மோடி தலைமையிலான அரசு வருமானவரித்துறையை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, சோதனை என்ற பெயரில் அதிமுகவை தன்னுடைய அரசியல் தேவைக்கு பணிய வைப்பதற்காக மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.

மேலும் இத்தகைய சோதனைகள் மூலம் கைப்பற்றப்பட்டுள்ள பணத்தில் மத்திய ஆட்சியாளர்கள் பங்கு பெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. இப்பின்னணியில் ஊழல், முறைகேடுகளில் மூழ்கிக்கிடக்கும் அதிமுக அரசை எதிர்த்தும், அந்த அரசின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க மறுத்து வரும் மத்திய மோடி அரசை எதிர்த்தும் தமிழக மக்கள் குரல்கொடுக்க முன்வர வேண்டும். ஊழல் எதிர்ப்பில் ஆர்வமுள்ள அனைத்து ஜனநாயக எண்ணம் கொண்டோர் இணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டும் என்று'' பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x