

கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் வே.ராஜாராமன் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: சிலப்பதிகாரம் என்னும் பெருங்காப்பியத்தை தமிழுக்கு தந்து அழியாப் புகழ் பெற்ற இளங்கோவடிகளுக்கு கேரளத்தில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய வேண்டும் என்பது கேரளம் வாழ் தமிழர்களின் நீண்ட கால விருப்பம். அந்த வகையில் கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் தொகை ரூ.2.50 கோடியில் தமிழக அரசின் பங்குத் தொகையான ரூ.1 கோடியை கேரள பல்கலைக்கழகத்துக்கு வழங்குமாறு தமிழ் வளர்ச்சி இயக்குநர் பரிந்துரைத்துள்ளார்.
இதை பரிசீலித்த அரசு, ரூ.1 கோடியை சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. அதன்படி, இளங்கோவடிகள் இருக்கை மூலம் தமிழ்-மலையாள மொழிகளின் ஒப்பாய்வு, மொழி பெயர்ப்பு உள்ளிட்ட பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் கேரள பல்கலைக்கழக இளங்கோவடிகள் இருக்கையை ஆய்வு செய்ய வருகை தரும்போது முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.