

சென்னை: சென்னை, பெரியார் நகரில் ரூ.210.80 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள `விழுதுகள்' ஒருங்கிணைந்த சேவை மையங்களையும் திறந்துவைத்தார்.
சென்னை கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சைகளை வழங்க பெரியார் நகரில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி தரை மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய மருத்துவமனையைக் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக 3 தளங்களுடன் விரிவாக்கம் செய்ய கடந்தாண்டு மார்ச் 7-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
பெரியார் நகரில் கட்டப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனைக் கட்டிடத்துக்கு கடந்த பிப்.23-ம் தேதி ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என்று பெயர் சூட்டி ஆணையிட்டார். மொத்தம் 6 தளங்களோடு பல்வேறு புதிய உயர் சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் ரூ.210.80 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இப்புதிய மருத்துவமனை, தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, 3 அறுவை அரங்கங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், 2-வது தளத்தில் முழு உடல் பரிசோதனை கூடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவுகள் உள்ளன.
3-வது தளத்தில் பிரசவ வார்டு, மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு வார்டு, குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு, 4-வது தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, மைய ஆய்வகம், எக்ஸ்ரே பிரிவு, 5-வது தளத்தில் இருதயவியல் பிரிவு, 3 அறுவை அரங்கங்கள், தோல் நோய் வார்டு, கேத் லேப், 6-வதுதளத்தில் சிறுநீரகவியல், ரத்தக்குழாய் சிறப்பு சிகிச்சை வார்டுகள், சிறுநீரகக் கற்களுக்கான ESWL சிகிச்சை, புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, நிர்வாக அலுவலகம் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மொத்தம் 560 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைக்கு 102 மருத்துவர்கள், 194 செவிலியர்கள், 79 மருத்துவம் சாராபணியாளர்கள், 20 அமைச்சுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ரூ.10.82 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள `விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையம்' உட்கோட்ட அளவில் 9 மையங்களும், வட்டார அளவில் 38 மையங்களும் முதல்வரால் திறக்கப்பட்டன.
மேலும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ரூ.2.24 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள 4 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, 72 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.