

தூத்துக்குடி: திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை வழிபாடு நடத்தினார்.
தூத்துக்குடி, நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை ஆட்சியர் க.இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வரவேற்றனர். பின்னர், கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதிக்கு வந்த ஆளுநரை, கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.
அவதாரப் பதி வாயிலில் செண்டை மேளம் முழங்க அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர். அய்யா வைகுண்டர் சந்நிதியில் ஆளுநர் ரவி வழிபட்டு, பதியை மூன்று முறை சுற்றி வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அய்யா வைகுண்டர் படமும், விளக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. பின்னர், காரில் நெல்லைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
நிகழ்ச்சியில், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், துணைத் தலைவர் அய்யாபழம், பொருளாளர் கோபால் மற்றும் நிர்வாகிகள், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதொய்டிட, எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தொடர்ந்து, பாளையங்கோட்டையில் தனியார் ஹோட்டலில் தொழில் வர்த்தக சங்கத்தினர், வணிகர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். இரவு வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் ஆளுநர் தங்கினார். இன்று காலை நெல்லை-குமரி தேசிய நெடுஞ்சாலையில் செங்குளம் பகுதியில் உள்ள அழகுமகாலில் நடைபெறும் அய்யா வைகுண்டர் அவதார திருவிழாவில் பங்கேற்கும் ஆளுநர், அங்கிருந்து புறப்பட்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் மகாராசி மகாலில், மதன்மோகன் மாளவியா பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுடன்ன் கலந்துரையாடுகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி வழியாக விமானத்தில் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.