

மதுரை: ‘‘பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை 100 சதவீதம் விரைவாக முடித்து, ஏப்ரல் மாதத்தில் திறக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது’’ என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மதுரை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம், கழிவு நீர் பராமரிப்பு மற்றும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது போதுமான குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். 24 மணி நேரமும் மக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்காக ரூ.1,609.69 கோடியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக மாநகராட்சிக்கு 135 எம்எல்டி குடிநீர் பெறப்படுகிறது.
தற்போது மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் இந்த குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 1,63,958 குடிநீர் இணைப்புகளில் 1,05,000 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கி ஏப்ரல் மாதத்தில் இந்த குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைக்க பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
பெரியாறு கூட்டுக் குடிநீர் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட பிறகு வீடுகளில் மீட்டர் பொருத்தி, மாநகராட்சி மன்ற தீர்மானத்தில் வைத்து குடிநீருக்குப் பயன்பாட்டிற்குக் கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி நகர்ப்பகுதியில் 72 வார்டுகளில் பாதாளச் சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண மறுசீரமைப்பு செய்வதற்கு தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும், பாதாளச் சாக்கடை மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.
தினமும் 610 மெட்ரிக் டன் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு மதுரை மாநகராட்சியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. குடிநீர் பழுது, சுகாதாரப் பணிகளையும் நெருக்கமாகக் கவனித்து வருகிறோம். விரைவில் இந்தப் பணிகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, 100 சதவீதம் மதுரையைத் தூய்மை நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.