

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளர் மற்றும் அவரது உறவினர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் போலீஸாரை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் நகரப்பகுதியில் வசிப்பவர் தினேஷ்குமார். அதிமுகவின் திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு சிலர் அடிக்கடி சிலர் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, அதிமுக பேரூர் செயலாளர் திருக்கழுக்குன்றம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, பேரூர் செயலாளர் தினேஷ்குமார், அவரது உறவினர் மோகனை அந்த நபர்கள் அரிவாளால் வெட்டியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார், வெள்ளாளர் தெருவை சேர்ந்த வினோத்குமார் (33), திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த கவுரிசங்கர் (எ) அப்பு (29) ஆகியேரை புதன்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போலீஸார் அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை அவரது வீட்டில் கைது செய்ய முயன்றனர். ஆனால், மதுராந்தகம் எம்.எல்.ஏ.மரகதம் உள்ளிட்ட அதிமுகவினர் ஆறுமுகம் வீட்டின் முன்பு திரண்டு போலீஸாரின் கைது நடவடிக்கையை தடுத்ததாக தெரிகிறது. இதனால், போலீஸாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ள வரும் அதிமுகவினரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமணம் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் திருக்கழுக்குன்றம் - கருங்குழி செல்லும் சாலையில் மாவட்ட செயலாளர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசு மற்றும் போலீஸாரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, டிஎஸ்பிக்கள் புகழேந்தி கணேஷ், அனுமந்தன் தலைமையிலான போலீஸார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட அவைத் தலைவர் தனபால், மதுராந்தகம் எம்.எல்.ஏ உள்பட அதிமுகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.