

சென்னை: “ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை அரசு ஏன் மசூதிகளுக்கு தர வேண்டும்? ஏன் ரேஷன் கடை மூலம் நேரடியாக அம்மக்களுக்கு வழங்கக்கூடாது?. மதவாதத்தை ஊக்குவிக்க தமிழக அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது.” என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது அரசியல்வாதிகள் மதசார்பற்ற அரசு என மார்தட்டிக் கொள்வதில் எத்தனை பித்தலாட்டம் மறைந்து இருக்கிறது என்ற உண்மையை இந்துக்கள் உணர வேண்டும்.
நேற்று, இந்தாண்டு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு என 7,920 மெட்ரிக் டன் தரமான பச்சரிசியை மசூதிகள், தர்காக்கள் மூலமாக தமிழக அரசு அளிக்க உத்தரவு போட்டுள்ளது.
அதாவது இதுவரை அளித்ததைவிட 30 சதவீதம் அதிகமாக அளித்துள்ளது. வருகின்ற 2026 தேர்தலில் முஸ்லிம் ஓட்டுக்களை குறி வைத்து திமுக, மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்துள்ளது.
இந்துக்கள் ஆடி மாதம் ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் ஏழை எளிய மக்கள் முதல் அனைவரும் கூழ் வார்த்தல் நடத்துகிறார்கள். ஆனால் அதற்கு உதவி செய்ய தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு மனமில்லை.
பொங்கல் பரிசு தமிழர்களுக்கு ரேஷன் கடையின் பொதுவினியோகத் திட்டம் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. அதிலேயும் பொங்கலை கொண்டாடாத முஸ்லிம் பெண்களுக்கு முதலில் அளித்து அதனை போட்டோ எடுத்து செய்தி பத்திரிகைகளில் ஒவ்வொரு முறையும் அரசு வெளியிடுகிறது.
ரம்ஜான் நோன்புக்கு தரும் அரிசியை ஏன் மசூதிகளுக்கு தர வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. இதை ஏன் ரேஷன் கடைகள் மூலம் நேரடியாக அம்மக்களுக்கு வழங்கக்கூடாது? மதவாதத்தை ஊக்குவிக்க தமிழக அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது.
மசூதி மற்றும் அதன் வருமானம், சொத்து ஆகியவை முஸ்லீம்களிடம் உள்ளது. அதன் மூலம் அவர்கள் தங்கள் மதத்தை வளர்க்கிறார்கள். இந்து கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மதசார்பற்ற அரசின் இரும்புப் பிடியில் இருக்கிறது. ஆனால் இந்து கோயில்களிலிருந்து கிடைக்கும் வருமானம் இந்து சமயத்தை வளர்க்க உதவுகிறதா?
அரசை நடத்துபவர்கள் சனாதன இந்து தர்மத்தை அழிப்பதே தனது பணி எனப் பேசியது எத்தகைய ஆபத்து என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கோயில் திருப்பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து அதன் இறுதி நேரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை கோயில் திருப்பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கியதா?
எனவே மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
மக்களுக்கு உதவி செய்யுங்கள், அதனை வேண்டாம் என்று சொல்லவில்லை. மதசார்பற்ற அரசு என பேசிக்கொண்டு மதத்தின் அடிப்படையில் பாரபட்சமாக செயல்படுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.