Published : 26 Feb 2025 06:56 PM
Last Updated : 26 Feb 2025 06:56 PM

பாம்பன் ரயில் பாலம் விரைவில் திறப்பு: மத்திய இணை அமைச்சர் தகவல் 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் சோமண்ணா.

திருச்சி: தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் சோமண்ணா, பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சிக்கு வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் பாலம் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டது. பிரதமர் மோடி தேதி கிடைத்ததும் திறப்புவிழா விரைவில் நடக்கும். பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு ரயிலில் சென்ற பக்தர்கள் எந்த சிரமத்தையும் அனுபவிக்கவில்லை. நான் அங்கு 5 நாட்கள் தங்கியிருந்தேன். ரயில்வே உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. மக்கள் அனைவரும் நிம்மதியாக கும்பமேளாவிற்கு சென்று வந்தனர். பிரயாக்ராஜ் செல்வதற்காக மும்பையிலிருந்து நான்கு நிமிடத்திற்கு ஒரு ரயில் விடப்பட்டது.

நாள்தோறும் 30 ஆயிரம் முதல் லட்சக்கணக்கான பயணிகள் பிரயாக்ராஜ்க்கு ரயிலில் பயணம் செய்தனர். இதன் மூலம் அந்த மாவட்ட ரயில்வேக்கு ரூ.70 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பிரதமர் மோடியும், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சிறப்பாக கும்பமேளாவை நடத்தி, பாரம்பரியமிக்க இந்தியாவுக்கு மற்றொரு வரலாற்றை உருவாக்கி உள்ளனர். நீங்கள் அங்கு சென்று பார்க்க வேண்டும். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 1,225 கி.மீ., இருவழி ரயில் பாதைப் பணிகள், 2,242 கி.மீ., தூரம் எலட்க்ட்ரிஷியன் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் 687 ரயில்வே லெவல் கிராஸிங் பகுதிகளில் பாலங்கள், சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 94 சதவீதம் எலக்ட்ரிஷியன் பணிகள் முடிந்துள்ளன. 2026-ம் ஆண்டு 100 சதவீதம் இப்பணிகள் செய்து முடிக்கப்படும். தமிழகத்தில் 22 ரயில்வே திட்டங்கள் ரூ.33,467 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.2,950 கோடியில், 77 ரயில்வே நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ரூ.1,460 கோடியில் கவச் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாள்தோறும் 20 ஆயிரம் பேர் வந்து செல்லும் தஞ்சாவூர் ரயில் நிலையம் ரூ.12 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. 2027-ம் ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவடையும்'' என்றார். பின்னர் அவர் கார் மூலம் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x