Published : 26 Feb 2025 05:32 PM
Last Updated : 26 Feb 2025 05:32 PM
சென்னை: “கட்சியினர் சுற்றி நிற்க, ஊடகங்களில் வாய்ச்சவடால் பேச்சு பேசும், அண்ணாமலை, வரும் மார்ச் 5-ம் தேதி அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் வந்து பேசட்டும், அவரது கேள்விகள் அனைத்துக்கும் விரிவான, விளக்கமான பதில் கிடைக்கும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாிநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கு ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள, தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்புவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். பாஜக, கூட்டத்தில் பங்கேற்று, தனது கருத்துகளை தெரிவிக்கலாம் ஆனால், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஊடகங்களில் முதல்வர் பற்றி அருவெறுப்பான, தரம் தாழ்ந்து பேசிய, அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அண்ணாமலை தமிழக பாஜக கட்சியின் தலைவர் பொறுப்பேற்ற ஆரம்ப நாளில் இருந்து ஆத்திரமூட்டும், வெறுப்பு அரசியலை விதைத்து, அமைதியை சீர்குலைத்து தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகிறார். “எதைத் தின்றால் பைத்தியம் தீரும்” என மனநிலையில் தமிழகத்தின் தொன்மை மரபுகளையும், நாகரிக உறவுப் பண்புகளையும் நிராகரித்து, நாக்பூர் குருமார்களின் கடைக்கண் பார்வைக்காக அறிவுக்கு தொடர்பற்ற பேச்சுக்களை பேசி வருகிறார்.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்ற தொகுதிகளில் எல்லைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டப்படியான கடமையாகும். சங் பரிவார் கும்பலுக்கு அரசியல் அமைப்பு சட்டம் எனில் எட்டிக்காய் கசப்பானது. அதனை அவர்கள் ஒருபோதும் மதித்ததில்லை என்பதை நாடறியும். அண்ணாமலை பேட்டியில் கூறியது போல் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் (2002) தொகுதிகள் மறுசீரமைப்பை 25 ஆண்டுகள் ஒத்தி போடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மோடி ஆட்சி ஒத்திப் போட்டு விட்டது.
இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பும், தொகுதிகள் மறு சீரமைப்பும் ஒரே நேரத்தில் நடக்கும் சூழல் உருவாகி வருவதை அரை மில்லி கிராம் அறிவு கொண்டவர்களும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் பாவம், அண்ணாமலை, அரசியல் அறிவுக்கு தொடர்பில்லாதவர். விரல் விசைக்கு தக்கபடி ஆடும் பொம்மலாட்ட பொம்மை என்பதே உண்மையாகும். கட்சியினர் சுற்றி நிற்க, ஊடகங்களில் வாய்ச்சவடால் பேச்சு பேசும், அண்ணாமலை, வரும் மார்ச் 5-ம் தேதி அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் வந்து பேசட்டும், அவரது கேள்விகள் அனைத்துக்கும் விரிவான, விளக்கமான பதில் கிடைக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT