Last Updated : 26 Feb, 2025 01:21 PM

1  

Published : 26 Feb 2025 01:21 PM
Last Updated : 26 Feb 2025 01:21 PM

மாறும் வானிலை | இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து 3 நாட்களுக்கு ரத்து

நாகை  - இலங்கை இடையே இயங்கும் 'சிவகங்கை' கப்பல்

சென்னை: வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது.

வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22 ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 7.30 க்கு நாகையில் கிளம்பி 11.30 க்கு காங்கேசன் துறைமுகத்தை அடையும் கப்பல், அங்கிருந்து மறு மார்க்கத்தில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 க்கு நாகையை வந்தடைந்தது. இதனை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று முதல் 28 ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படியே நேற்று முன்தினம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்க்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 26 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 1 ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாகை - இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு தடைப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x