Published : 26 Feb 2025 12:19 PM
Last Updated : 26 Feb 2025 12:19 PM

“50 ஓவர் கிரிக்கெட்டில் கோலிதான் பெஸ்ட்!” - ரிக்கி பாண்டிங் புகழாரம்

ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘அனைத்து கால சிறந்த ஸ்கோரர்’ என்று நினைவுகூரப்படுபவராக இருப்பார் விராட் கோலி என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த சதம் மூலம் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி. பாண்டிங்கை கடந்து விட்ட கோலி இன்னும் 149 ரன்களே பின் தங்கியுள்ளார் சங்கக்காராவையும் கடந்து செல்ல. ஆனால் உண்மையான ஆல்டைம் கிரேட் சச்சின் டெண்டுல்கரை எட்டிப்பிடிக்க கோலி இன்னும் 4,341 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த ரன்களையும் எடுத்து விட்டுத்தான் ஓய்வு பெறுவேன் என்று கோலி சொன்னால் கம்பீருக்கும் அணித்தேர்வுக் குழுவுக்கும் கிலிதான்.

இந்நிலையில் ஐசிசி ரிவியூ Podcast-ல் கூறும்போது, “விராட் கோலி போன்ற ஒருவரை அவ்வளவு சுலபமாக நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. இந்தச் சாதனை மூலம் அவர் மேலும் உத்வேகம் பெறுவார் என்று கருதுகிறேன். இப்போது என்னைக் கடந்து சென்று விட்டார், இன்னும் இரு வீரர்கள்தான் அவருக்கு முன்னால் உள்ளனர்.

எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்டைம் ரன் ஸ்கோரர் என்று தன்னை நினைவில் கொள்ளும் படியாக வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார் என்று உறுதியாகச் சொல்லலாம். ரன்கள் குவிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய தாகத்துடன் அவரது உடல் நிலையும் கைகொடுத்தால் நான் கோலி முடிந்து விட்டார் என்று கூற மாட்டேன், உடல் ஃபிட்னெஸ்ஸைப் பொறுத்தவரை அவர் கடுமையாக உழைக்கிறார்.

இப்போது சங்கக்காராவுக்கு அருகில் உள்ளார். அவர் ரன்களையும் கடக்க நீண்ட காலம் பிடிக்காது, ஏன் அடுத்தப் போட்டியிலேயே கூட 2-ம் இடத்திற்கு அவர் முன்னேறலாம். ஆனால் சச்சினை எட்டிப்பிடிக்க இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும்.

கோலி நீண்ட காலமாக சாம்பியன் வீரராக இந்த வடிவத்தில் திகழ்கிறார். 50 ஓவர் கிரிக்கெட்டில் அவர் நம்ப முடியாத அளவுக்கு பெரிய வீரர். இன்னும் சொல்லப்போனால் நான் ஆணித்தரமாகக் கூற வேண்டுமென்றால் கோலியைப் போல சிறந்த 50 ஒவர் கிரிக்கெட் வீரரை நான் இதுவரை பார்த்ததில்லை.

சச்சினை எட்டிப்பிடிக்க 4000+ ரன்கள் தேவை, ஆனால் இது சச்சினின் சிறப்பையும் அவரது நீண்ட கால கிரிக்கெட்டின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. சச்சின் அளவுக்கு அவ்வளவு நீண்ட காலம் அந்தத் தர நிலையை தக்க வைக்க முடியுமா? எத்தனைக் காலம் தான் உடல்தகுதி, கிரிக்கெட் தரநிலையைப் பாதுகாக்க முடியும் என்பதைக் கொண்டுதான் நான் திறமையை மதிப்பிடுகிறேன்.

கோலி போன்ற வீரர்கள் பெரிய தருணங்களில் எழுந்து நிற்பார்கள், எங்களுக்கு எப்படி இங்கிலாந்தோ, அதே போல் இந்தியாவுக்குப் பாகிஸ்தான், அன்று அந்த ட்ரிக்கி பிட்சில் டாப் ஆர்டரில் யாராவது ஒருவர் நின்று மேட்ச் வின்னிங்ஸை ஆட வேண்டும். மீண்டும் ஒருமுறை கோலி இதனை நிரூபித்துள்ளார்.” என்றார் பாண்டிங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x