Published : 26 Feb 2025 06:15 AM
Last Updated : 26 Feb 2025 06:15 AM
சென்னை: சீமான் வீட்டில் வீசுவதற்காக, பெட்ரோல் குண்டுகளுடன் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மை காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாகவம், சர்ச்சைக்குரிய வகையிலும் தொடர்ந்து கருத்துகளை சீமான் தெரிவித்து வருவதால், அவர் மீதோ, அவரது வீடு, உடமைகள் மீதோ தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அருணுக்கு உளவுப்பிரிவு போலீஸார் ரகசிய தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கண்காணிப்புப் பணி சென்னை முழுவதும் முடுக்கி விடப்பட்டது.
அதன்படி, ராயப்பேட்டை போலீஸார், அவர்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது, அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் சிலர் பெட்ரோல் குண்டுகளுடன் பதுங்கி இருப்பதாகவும், அவற்றை சீமான் வீடு மீது வீச திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விடுதிக்குள் ராயப்பேட்டை போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
ஆனால், அதற்கு முன்னதாகவே 10 பேர் கொண்ட அந்தக் கும்பல் 4 இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பிவிட்டது. இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது. இதற்கிடையே, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை போலீஸாரின் வாகன சோதனையில் 4 இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் கும்பல் சிக்கியது.
போலீஸாரின் விசாரணையில் அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டச் செயலாளரான, ராயப்பேட்டை சைவ முத்தையா 5-வது தெருவைச் சேர்ந்த குமரன் என்ற டிங்கர் குமரன் (45), அவரது கூட்டாளிகள் அதே அமைப்பைச் சேர்ந்த விருகம்பாக்கம் பகுதி துணைச் செயலாளர் சுரேஷ் (28), ஈரோடு சந்திரன் (34), மயிலாப்பூர் கோபி (27), ராயப்பேட்டை பிரசாந்த் (27), சேத்துப்பட்டு சக்திவேல் (23), கேவை சித்தாபுரம் ரஞ்சித் (41), ராயப்பேட்டை மணிகண்டன் (24), தீபக் (34), ராஜா என்பது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து சீமான் வீட்டில் வீசுவதற்காகக் கொண்டு சென்ற 4 பெட்ரோல் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT